தமிழ்நாடு செய்திகள்

டி.ஜி.பி.சைலேந்திரபாபு நாளை மறுநாள் கோவை வருகை

Published On 2022-12-08 15:15 IST   |   Update On 2022-12-08 15:15:00 IST
  • டி.ஜி.பி.சைலேந்திரபாபு நாளை மறுநாள் 10-ந் தேதி (சனிக்கிழமை) கோவைக்கு வருகிறார்.
  • கோவைக்கு வரும் அவர், கார் குண்டு வெடிப்புக்கு பிறகு கோவையில் தற்போது உள்ள நிலைமை குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.

கோவை:

கோவையில் கடந்த அக்டோபர் 23-ந்தேதி கார் குண்டு வெடிப்பு நடந்தது.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உடனடியாக கோவைக்கு விரைந்து வந்தார். சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், இதில் தொடர்புடையவர்களை விரைந்து பிடிக்குமாறும், விசாரணையை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து போலீசார் துரித விசாரணை நடத்தி, இந்த வழக்கில் தொடர்புடையதாக 6 பேரை கைது செய்தனர். மேலும் வெடி மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களையும் கைப்பற்றினர்.

மேலும் அசம்பவாவிதங்களை தவிர்க்கும் விதமாக போலீசார் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து போலீசாருக்கு அறிவுரைகளையும் டி.ஜிபி. வழங்கினார்.

இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகளும் இந்த வழக்கு சம்பந்தமாக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் டி.ஜி.பி.சைலேந்திரபாபு நாளை மறுநாள் 10-ந் தேதி (சனிக்கிழமை) கோவைக்கு வருகிறார். கோவைக்கு வரும் அவர், கார் குண்டு வெடிப்புக்கு பிறகு கோவையில் தற்போது உள்ள நிலைமை குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.

மேலும் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் புதிதாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் கோவையில் சில இளைஞர்கள் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதை கண்டுபிடித்த போலீசார் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது அவர்களை நல்வழிப்படுத்துவதற்கான நடவடிக்கைளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்வார் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News