தமிழ்நாடு

ஆன்லைனில் விளையாடுவதில் எது-எது சூதாட்டம்? ரம்மி-போக்கர் விளையாட்டுகள் முழுவதும் தடை

Published On 2022-10-29 07:23 GMT   |   Update On 2022-10-29 07:23 GMT
  • ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பரிமாறப்படும் பணத்தை எந்தவொரு வங்கியும் பரிமாற்றம் செய்யக்கூடாது.
  • எந்தவொரு ஆன்லைன் விளையாட்டு அளிப்பவர்களுக்கான பதிவுச் சான்று 3 ஆண்டுகளுக்கு செல்லும்.

சென்னை:

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் மூலம் அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளும் தடை செய்யப்படுகிறது.

மேலும், பணம் (அல்லது வெகுமதிகள்) வெல்லக்கூடிய வாய்ப்புள்ள விளையாட்டாக கருதப்படும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளும் (ரம்மி, போக்கர்) தடை செய்யப்படுவதாக சட்டத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எந்தவொரு ஆன்லைன் விளையாட்டை வழங்குபவரும், சூதாட்டத்தை புகுத்தக் கூடாது. அந்த விளையாட்டை விளையாட எவரையும் அனுமதிக்கக்கூடாது. பணம் தொடர்புடைய ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பரிமாறப்படும் பணத்தை எந்தவொரு வங்கியும் பரிமாற்றம் செய்யக்கூடாது. எந்தவொரு ஆன்லைன் விளையாட்டு அளிப்பவர்களுக்கான பதிவுச் சான்று 3 ஆண்டுகளுக்கு செல்லும். ஒழுங்குமுறைகளை மீறினால், விளக்கம் கேட்டு அந்தப் பதிவு ரத்து செய்யப்படும்.

இதற்கு 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். இதற்கான மேல்முறையீட்டு குழுவை, ஒரு தலைவர் (ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி) மற்றும் 2 உறுப்பினர்களைக் கொண்டு அரசு அமைக்கும்.

சூதாட்டம் அல்லாத இதர ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

அதில் ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் தலைமையில் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்கு முறை ஆணையம் விரைவில் செயல்பட உள்ளது. இந்த ஆணையத்தில் ஐ.டி.வல்லுனர்கள், உளவியல் நிபுணர், ஆன்லைன் விளையாட்டு வல்லுனர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இவர்கள் எந்தெந்த ஆன்லைன் விளையாட்டுக்கு அனுமதி வழங்குவது, தொடர்ந்து கண்காணிப்பது, தரவுகளை சேகரிப்பது, குறைகளுக்கு தீர்வு காண்பது, விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பது உள்ளிட்ட பணிகளை ஆணையம் மேற்கொள்ளும்.

உள்ளூரில் இல்லாத ஆன்லைன் விளையாட்டு வழங்குபவர் எவரும், எந்தவொரு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையோ, பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்பு உள்ள விளையாட்டாக கருத்தப்படும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையோ, ஒழுங்குமுறைக்கு மாறான விளையாட்டுகளையோ வழங்கக் கூடாது. அப்படி வழங்கினால், அந்த விளையாட்டு வழங்குபவரை தடை செய்வதற்கு மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொள்ள வேண்டும்.

Tags:    

Similar News