தமிழ்நாடு

அரசு பள்ளி பிளஸ்-2 மாணவர்களை கல்லூரிகளுக்கு அழைத்து செல்ல முடிவு- பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

Published On 2023-02-15 04:02 GMT   |   Update On 2023-02-15 04:02 GMT
  • வருகிற 25-ந்தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கள் அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
  • அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெற வேண்டும் என்பதே இந்தப் பயிற்சிப் பட்டறையின் நோக்கமாகும்.

சென்னை:

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) அலுவலர்கள், பள்ளிக்கல்வித் துறையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் உள்பட 600 பேருக்கு 2 நாட்கள் நடைபெறும் உள்ளுறைப் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) சென்னையில் நேற்று தொடங்கியது.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம், காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய 3 இடங்களில் இந்தப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சி குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

இந்த ஆண்டு பிளஸ்-2 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் பகுதியில் உள்ள கல்லூரிகளில் என்னென்ன உயர்கல்வி வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்தும், உயர்கல்விக்கு வழிகாட்டுவது குறித்தும் என்.எஸ்.எஸ். அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு 2 நாட்கள் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இதையடுத்து இந்தப் பயிற்சியில் பங்குபெறும் ஒவ்வொரு என்.எஸ்.எஸ். அலுவலரும் தங்கள் கல்லூரியில் பயிலும் 30 என்.எஸ்.எஸ். மாணவர்களை இதற்கென கண்டறிவர்.

இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை ஏற்ப 10 முதல் 15 என்.எஸ்.எஸ். மாணவர்கள் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக நியமிக்கப்படுவர். திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 10 மாணவர்கள் அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

இதன்மூலம் அங்குள்ள உயர்கல்வி வாய்ப்புகள், பட்டப்படிப்புகள், ஆய்வகங்கள், விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கான வசதிகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

அந்த வகையில் வருகிற 25-ந்தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கள் அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெற வேண்டும் என்பதே இந்தப் பயிற்சிப் பட்டறையின் நோக்கமாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News