தமிழ்நாடு

அம்மா உணவகங்களுக்கு புதிய பொருட்கள் வாங்க முடிவு

Published On 2023-06-29 05:59 GMT   |   Update On 2023-06-29 05:59 GMT
  • அம்மா உணவகத்தை மேம்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
  • பழுதடைந்த அம்மா உணவக கட்டிடங்களை சரி பார்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை மாநகராட்சி மூலம் 393 அம்மா உணவகங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இவை 10 ஆண்டுக்கு மேலாக இயங்கி வருவதால் அங்குள்ள பொருட்கள் பழுதடைந்தும் உடைந்தும் உள்ளன. கிரைண்டர், மிக்சி, பாத்திரங்கள் உள்ளிட்டவை பழுதாகி அதனை சரி செய்து இயக்கி வருகின்றனர்.

தினமும் 3 வேளையும் உணவு தயாரிப்பதற்கு தேவையான உபகரணங்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளன. இதனால் அங்குள்ள ஊழியர்கள் சிரமப்படுகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் உணவு தயாரிப்பதில் தாமதமும் ஏற்படுகிறது. இவற்றை சரி செய்து அம்மா உணவகத்தை மேம்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

அம்மா உணவகங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் பொருட்கள் எவை எவை தொடர்ந்து பயன்படுத்தலாம், அவற்றில் சரி செய்யக்கூடியது எது, பயன்படுத்த தகுதியற்ற பொருட்கள் எவை என கண்டறிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மண்டல தலைவர், சுகாதார அதிகாரிகள், உதவி பொறியாளர்கள் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இக்குழு ஒவ்வொரு அம்மா உணவகத்திற்கும் சென்று பொருட்களை ஆய்வு செய்து ஓட்டை உடைசலானதை ஏலத்திற்கு விடவும் அதற்கு பதில் புதிய பொருட்கள் வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பழுது பார்த்து பயன்படுத்தக் கூடியவற்றை சரி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணி 2 வாரத்தில் முடிக்கப்பட்டு புதிய பொருட்கள் வாங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதே போல பழுதடைந்த அம்மா உணவக கட்டிடங்களை சரி பார்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தந்த கட்டிடங்களில் கூரை ஒழுகுகிறது, பொதுமக்கள் சாப்பிட முடியாமல் பாதிப்பு உள்ளதா? என ஆய்வு செய்து அற்றை சரி பார்க்கும் நடவடிக்கையும் மாநகராட்சி மண்டல அலுவலர் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

Tags:    

Similar News