தமிழ்நாடு

கோவை உக்கடம் மேம்பாலத்தில் பாலஸ்தீன கொடி கட்டிய 3 பேர் மீது வழக்கு

Published On 2023-10-26 03:54 GMT   |   Update On 2023-10-26 04:51 GMT
  • பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தமிழகத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
  • 3 பேர் மீது சட்டத்திற்கு புறம்பாக ஒன்று கூடுதல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை:

இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர்.

இந்த போரை நிறுத்த கோரியும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தமிழகத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 24-ந் தேதி கோவை உக்கடம் பகுதியில் அனைத்து ஜமாத், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பு மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில் அனைத்து ஜமாத்தை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

போராட்டம் நடைபெற்ற இடத்தையொட்டி புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போராட்டத்தின் போது சிலர், மேம்பாலத்தின் மீது பாலஸ்தீன கொடியை கட்டி இருந்தனர்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவியது.

இதையடுத்து உக்கடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பின் மாவட்ட செயலாளர் சபீர் அலி, மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த அபுதாகீர், ரபீக் ஆகிய 3 பேர் பாலஸ்தீன கொடியை மேம்பாலத்தின் மீது கட்டியது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் சபீர் அலி, அபுதாகீர், ரபீக் ஆகியோர் மீது சட்டத்திற்கு புறம்பாக ஒன்று கூடுதல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

Similar News