தமிழ்நாடு

ஆடி மாதத்தில் 2 அமாவாசை- அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுக்கு ஆபத்து: ஆற்காடு பஞ்சாங்கத்தில் பரபரப்பு தகவல்

Published On 2023-06-30 06:30 GMT   |   Update On 2023-06-30 06:30 GMT
  • ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வருவதால் நல்ல பலன்களும், மோசமான பலன்களும் நடக்கலாம்.
  • அரசியல்வாதிகள் மற்றும் அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு பல தொந்தரவுகள் ஏற்படலாம்.

அமாவாசை தினத்தன்று தங்களது மூதாதையர்களுக்கு திதி வழங்கி வழிபடுவது வழக்கம். அதில் ஆடி அமாவாசையும், தை அமாவாசையும் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது. ஜூலை 17-ந்தேதி (ஆடி-1) அமாவாசையும், ஆகஸ்டு 16-ந்தேதி (ஆடி-31) ஒரு அமாவாசையும் என 2 அமாவாசை வருகிறது.

இதனால் எந்த அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு திதி வழங்கலாம் என்பது குறித்து பொதுமக்களிடம் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது.

இதுகுறித்து ஆற்காடு பஞ்சாங்க ஜோதிடர் சுந்தரராஜன் அய்யரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது. அதில் ஆகஸ்டு 16-ந்தேதி (ஆடி-31) வரும் அமாவாசையே ஆடி மாதத்திற்கு உரியதாகும். அந்த நாளிலேயே முன்னோர்களுக்கு திதி வழங்குவது நல்லது.

ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வருவதால் நல்ல பலன்களும், மோசமான பலன்களும் நடக்கலாம்.

வங்கி பரிவர்த்தனைகளில் பல புதிய மாற்றங்கள் ஏற்படும். நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்க தயாராக இருக்கும். ஆனால் வாங்குவதற்கு தான் வாடிக்கையாளர்கள் கிடைக்கமாட்டார்கள். வடமாநிலங்களில் மழைப்பொழிவு அதிக அளவில் இருக்கும்.

பெரிய தனவந்தர்கள், தொழில் அதிபர்கள் கஷ்டப்பட நேரலாம். பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முன்வருவார்கள். சோதனைகள் மூலம் கருப்பு பணம் அதிக அளவில் பறிமுதல் செய்யப்படும்.

அரசியல்வாதிகள் மற்றும் அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு பல தொந்தரவுகள் ஏற்படலாம்.

வடமாநிலங்களில் கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்கும். நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்படும். விமான போக்குவரத்து பயண டிக்கெட் விலை ஏற்ற இறக்கத்தில் இருக்கும். சோலார் உற்பத்தி அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News