தமிழ்நாடு செய்திகள்

மத்தூரில் சாலையில் தாறுமாறாக ஓடிய பஸ் மோதி கூலி தொழிலாளி பலி

Published On 2022-12-19 10:24 IST   |   Update On 2022-12-19 10:24:00 IST
  • சாலையோரம் வலதுபக்கம் நிறுத்தி இருந்த 5 மோட்டார் சைக்கிள் மீது மோதி பஸ் இழுத்து சென்றது.
  • விபத்து குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்தூர்:

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

இந்த பஸ்சை திருவண்ணாமலை மாவட்டம், தேக்கம்பாடி பகுதியை சேர்ந்த பழனி (வயது56) என்பவர் ஓட்டி வந்தார். நடத்துனராக செங்கம் முடியனூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் இருந்தார்.

இந்த நிலையில் இந்த பஸ் இன்றுகாலை 6.30 மணி அளவில் மத்தூர் பேருந்து நிலையம் அருகில் வந்தது.

அப்போது திடீரென டிரைவர் பழனிக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் பஸ் தாறுமாறாக சாலையில் ஓடியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர்.

இதனை கவனித்த அருகில் இருந்த நடத்துனர் எழுந்து பிரேக் போட்டு பஸ்சை நிறுத்த முயன்றார். ஆனால் சாலையோரம் வலதுபக்கம் நிறுத்தி இருந்த 5 மோட்டார் சைக்கிள் மீது மோதி பஸ் இழுத்து சென்றது.

அப்போது அந்த வழியாக டீ அருந்த சைக்கிளில் வந்த மத்தூர் நாகம்பட்டியை சேர்ந்த கமலநாதன் என்பவர் மீதும் அரசு பஸ் மோதி தரதரவென பஸ் இழுத்து சென்றது.

இந்த விபத்தால் பஸ்சின் அடியில் சக்கரத்தில் சிக்கி கமலநாதன் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News