தமிழ்நாடு செய்திகள்

பாலமேடு பகுதியில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய 4 பேர் கைது

Published On 2022-12-10 11:03 IST   |   Update On 2022-12-10 11:03:00 IST
  • சந்தன மரத்தை வெட்டி கடத்தியவர்கள் சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அலங்காநல்லூர்:

மதுரை பாலமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலமேடு ஸ்டேட் பேங்க் வழியாக சுமார் 2.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்தனர்.

அவர்களை சந்தேகத்தின்பேரில் போலீசார் வழிமறித்தனர். போலீசாரை கண்டதும் அந்த 3 பேரும் தப்பிச்செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்தனர். அவர்களிடம் சோதனை செய்தபோது சந்தன மரக்கட்டைகள் மற்றும் அரிவாள், கோடாரி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. அவர்கள் யார் என்று விசாரித்தபோது திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையை சேர்ந்த முருகன் (வயது 30), சஞ்சீவி (36), மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த மணி(26) என்பது தெரியவந்தது.

அவர்கள் பாலமேடு அருகே உள்ள மாணிக்கம்பட்டி வனப்பகுதியில் சந்தன மரத்தை சிறிய கட்டைகளாக வெட்டி கடத்தி கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சந்தன கட்டைகள், கோடாரி, அரிவாள், மரம் அறுக்கும் ரம்பம் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பாலமேடு அருகே உள்ள பாறைப்பட்டியை சேர்ந்த செல்வம் (35) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தன மரத்தை வெட்டி கடத்தியவர்கள் சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News