சென்னையில் உலக கோப்பை கிரிக்கெட்: மெட்ரோ ரெயில் சேவையால் 25 ஆயிரம் ரசிகர்கள் பயணம்
- அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தடையற்ற பயணத்தை வழங்குவதற்காக, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.
- சென்னையில் நடைபெற்ற போட்டி நாட்களில் மெட்ரோ ரெயில் சேவை நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டது.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நடப்பாண்டில் ஐ.சி.சி. ஆடவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 5-ந்தேதி தொடங்கி சென்னை எம்.ஏ.சிதம்பரம் சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தம் 5 போட்டிகள் நடைபெற்றன. அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தடையற்ற பயணத்தை வழங்குவதற்காக, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. சென்னையில் நடைபெற்ற போட்டி நாட்களில் மெட்ரோ ரெயில் சேவை நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற முதல் 2 கிரிக்கெட் போட்டிக்கான பயணச்சீட்டு வைத்திருந்த பயணிகளுக்கு போட்டியை பார்த்துவிட்டு திரும்பும் போது மெட்ரோ ரெயிலில் இலவச பயணம் வழங்கப்பட்டது. பின்னர், புக் மைஷோ உடன் இணைந்து, பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு தடையற்ற நுழைவு மற்றும் வெளியேறலை எளிதாக்கும் வகையில், போட்டிக்கான பயணச்சீட்டுகள் கியூ.ஆர். பார்கோடுடன் இணைக்கப்பட்டன. இதன் மூலம், கிரிக்கெட் போட்டிக்கான செல்லுபடியாகும் பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள், சென்னையில் நடைபெற்ற மீதமுள்ள மூன்று போட்டிகளுக்கும் கட்டணமின்றி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்.
மேலும், அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து போட்டி நடைபெற்ற சிதம்பரம் மைதானத்திற்கு மெட்ரோ இணைப்பு பஸ்களை வழங்கியதன் மூலம் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்தது. மொத்தம் 25 ஆயிரம் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.