தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்திலேயே அதிகபட்சம்: கோவையில் கோடை மழை 197 சதவீதம் கூடுதலாக பெய்தது

Published On 2023-05-12 09:33 IST   |   Update On 2023-05-12 12:00:00 IST
  • தற்போது வரலாறு காணாத வகையில் அதிக கோடை மழை பெய்து, கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது.
  • கோவையில் நேற்றும், காந்திபுரம், பீளமேடு, சின்னியம்பாளையம், சரவணம்பட்டி, லாலி ரோடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மழை பெய்து வெப்பத்தை தணித்தது.

கோவை:

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

தமிழகத்தின் 30 ஆண்டுகளாக சராசரியை ஆய்வு செய்யும் போது இந்த ஆண்டில் பெய்த கோடை மழை, 109 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.

குறிப்பாக கோவையில் 197 சதவீதம் கூடுதலாக கோடை மழை பதிவாகியுள்ளதாக வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக கோடைக்காலத்தின் வெப்ப நிலை அதிகரிக்கும் போது வெப்ப சலன மழை பெய்வது இயல்பு. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புள்ளி விபரங்களின் படி தமிழகத்தின் கடந்த 30 ஆண்டு கோடை மழையின் சராசரி 83.5 மி.மீ. ஆக பதிவாகியுள்ளது.

நேற்று காலை வரை தமிழகத்தில், 174.9 மி.மீ., மழை பெய்துள்ளது. தற்போது வரலாறு காணாத வகையில் அதிக கோடை மழை பெய்து, கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது.

அதன்படி, கோவையில் நேற்று காலை வரை, 321.2 மி.மீ., கோடை மழை பதிவாகியுள்ளது. கடந்த 30 ஆண்டு சராசரி மழைப்பொழிவை ஒப்பிடுகையில் 197 சதவீதம் மழை பொழிவு அதிகமாக பதிவாகி உள்ளது.

கோவையில் நேற்றும், காந்திபுரம், பீளமேடு, சின்னியம்பாளையம், சரவணம்பட்டி, லாலி ரோடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மழை பெய்து வெப்பத்தை தணித்தது.

வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறியதாவது:-

கோவையில் கோடை மழையின் 30 ஆண்டு சராசரி அளவு 108.1 மி.மீ., ஆக இருந்தது. தற்போது வரை மட்டும், 321.2 மி.மீ., மழை பொழிவு பதிவாகியுள்ளது. வழக்கமாக, கோடை மழை சராசரி பட்டியலில், கன்னியாகுமரி மாவட்டம் முதல் இடத்தில் இருந்தது. தற்போது, கோவை முதல் இடத்தை பிடித்துள்ளது. இன்னும், 20 நாட்களுக்கு கோடை மழை இருக்கும் என்பதால் மழை பதிவு அதிகமாக வாய்ப்புள்ளது.

பகல் நேரத்தில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக சூடான காற்றால், மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டு மழை பெய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News