தமிழ்நாடு

தொடர் விடுமுறை எதிரொலி: 1.25 லட்சம் பேர் ஒரே நாளில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணம்

Published On 2023-09-28 05:13 GMT   |   Update On 2023-09-28 05:13 GMT
  • பவுர்ணமி கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலைக்கு 500 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது.
  • கோயம்பேடு, தாம்பரத்தில் இருந்து பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன.

சென்னை:

மிலாடி நபி மற்றும் சனி, ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து காந்தி ஜெயந்தி என தொடர்ந்து அரசு விடுமுறை நாட்கள் வருவதால் வெளியூர் பயணம் அதிகரித்து உள்ளது.

சென்னையில் இருந்து வெளியூர் செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தொடர் விடுமுறையால் அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டதால் அரசு பஸ்களை நோக்கி மக்கள் படையெடுத்தனர்.

அரசு விரைவு பஸ்கள் மற்றும் மதுரை, திருநெல்வேலி, விழுப்புரம், கும்பகோணம், சேலம் போக்குவரத்து கழகங்களின் பஸ்களில் 25 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். நேற்று மாலையில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகரித்தது.

நள்ளிரவு 1 மணி வரை வெளியூர் சென்ற மக்களுக்கு போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ்களை ஏற்பாடு செய்தனர். முன் பதிவு இல்லாமல் 1 லட்சம் பேர் அரசு பஸ்களில் மட்டும் பயணம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று ஒரே நாளில் 1.25 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு அரசு பஸ்கள் மூலம் சென்றுள்ளனர்.

பவுர்ணமி கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலைக்கு 500 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது. கோயம்பேடு, தாம்பரத்தில் இருந்து பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன.

மேலும் வருகிற சனி, ஞாயிறு, திங்கட்கிழமை 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வருவதால் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் கோயம்பேட்டில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது.

தென்மாவட்ட ரெயில்களில் இடங்கள் இல்லாததால் அரசு பஸ்களில் மக்கள் பயணம் செய்வார்கள் என்பதால் தேவையான அளவு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகங்கள் தயாராக உள்ளன. நாளை பயணம் செய்ய 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஆம்னி பஸ்களிலும் பெரும்பாலான இடங்கள் நாளைய பயணத்திற்கு நிரம்பிவிட்டன.

Tags:    

Similar News