மாண்டஸ் புயலால் கடல் சீற்றம்: எண்ணூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை
- பழவேற்காடு பகுதியில் கடல் அலை பலத்த சீற்றத்துடன் வீசுகிறது.
- மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் கடலோர பகுதிகளில் இன்று காலை சாரல் மழை பெய்ய தொடங்கியது.
பொன்னேரி:
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறி உள்ளது. இதற்கு மாண்டஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து எண்ணூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பழவேற்காடு பகுதியில் கடல் அலை பலத்த சீற்றத்துடன் வீசுகிறது. புயல் காரணமாக பழவேற்காட்டை சுற்றி உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள், மீன்பிடி உபகரணங்களை அவர்கள் பத்திரமாக கடல் கரையில் கட்டி வைத்து உள்ளனர். மேலும் இன்று காலை வழக்கத்தை விட பழவேற்காடு கடலில் குளிர்ந்த காற்று வேகமாக வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர். இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.
மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் கடலோர பகுதிகளில் இன்று காலை சாரல் மழை பெய்ய தொடங்கியது. கடலில் அலையின் சீற்றமும் அதிகமாக இருந்தது. இதனால் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர்.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் (ரேடியேட்டர்) கொதிகலனின் வெப்பத்தை தணிக்க, 1 கி.மீ., தொலைவில் கடலில் இருந்து எடுக்கப்படும், கடல் நீர் குழாய்கள் புயல், கடல் சீற்றத்தால் சேதமடைந்து விடாத வண்ணம் அப்பகுதியை அணுமின் நிலைய நிர்வாகத்தினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் பேரிடர் மீட்புப்பணிகள் குறித்து அணுமின் நிலைய பாதுகாப்பு ராணுவத்தினர், தீயணைப்பு படையினர், மருத்துவ பிரிவினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஆலோசனை நடத்தி தயார் நிலையில் உள்ளனர்.