சமூக ஆர்வலர் மேதா பட்கர் வருகை- ஏகனாபுரத்தில் போலீஸ் குவிப்பு
- புதிய விமான நிலையத்திற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
- புதிய விமான நிலையத்துக்கு எதிராக கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது.
இந்த புதிய விமான நிலையத்திற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலானவை விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் என்பதால் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களும் பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏகனாபுரம் கிராம மக்கள் புதிய விமான நிலைய அறிவிப்பு வந்தது முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். புதிய விமான நிலையத்துக்கு எதிராக கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் பிரபல சமூக ஆர்வலர் மேதா பட்கர் ஏகனாபுரம் கிராமத்திற்கு வந்து அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க திட்டமிட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து ஏகனாபுரம் பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்தும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஏகனாபுரம் கிராமத்திற்கு செல்லும் அனைத்து பாதைகளில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து உள்ளனர். புதிய விமான நிலைய எதிர்ப்பாளர்களை கண்காணித்து வருகிறார்கள். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.