தமிழ்நாடு செய்திகள்

6 மணி நேரம் கொட்டிய தொடர் மழையால் ஸ்தம்பித்த ஊட்டி

Published On 2022-07-21 15:41 IST   |   Update On 2022-07-21 15:41:00 IST
  • அரசு கலைக்கல்லூரி சாலையில் இரண்டு இடத்தில் ராட்சத மரம் விழுந்தது.
  • ஊட்டி சேரிங்கிராஸ் சாலையில் வெள்ளம் தேங்கியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக மழை சற்று ஓய்ந்திருந்தது.

இந்தநிலையில் ஊட்டியில் நேற்று மழை மீண்டும் வெளுத்து வாங்கியது. காலை 11 மணி முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் 12 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை மாலை 6 மணி வரை மழை நீடித்தது.

பிங்கர் போஸ்ட், தலைகுந்தா, படகு இல்லம், மத்திய பஸ் நிலையம், சேரிங் கிராஸ், ஊட்டி மார்க்கெட் பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

மழையால் கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஊட்டி படகு இல்ல சாலை ரெயில்வே பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கியது. இதனால் ஊட்டி-காந்தள் இடையே செல்லும் நகர பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.

அரசு கலைக்கல்லூரி சாலையில் இரண்டு இடத்தில் ராட்சத மரம் விழுந்தது. தீயணைப்பு துறையினர் எந்திரங்கள் உதவியுடன் மரத்தை அறுத்து பொக்லைன் மூலம் அகற்றினர்.

ஊட்டி சேரிங்கிராஸ் சாலையில் வெள்ளம் தேங்கியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு நடந்த சாலை பணியால் அந்த பகுதி சேறும், சகதியுமாக காணப்பட்டது. மேல் கோடப்பமந்து பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் விளை நிலங்களில் மழைநீர் தேங்கியது.

தொடர் மழையால் மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, ஊட்டியில் 20 மி.மீ., மழை பதிவானது. இதேபோல கூடலூர் பகுதியிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. கனமழையால் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Tags:    

Similar News