தமிழ்நாடு

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் ரத்து

Published On 2022-11-05 05:02 GMT   |   Update On 2022-11-05 06:38 GMT
  • நெல்லை மாவட்டத்தில் அம்பை பகுதியில் அங்குள்ள ஒரு தியேட்டரில் தொடங்கி பல்வேறு பஜார் தெருக்கள் வழியாக ஊர்வலத்திற்கு அவர்கள் அனுமதி கேட்டனர்.
  • தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை சென்னை உயர்நீதிமன்றம் சங்கரன்கோவிலில் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி வழங்கியது.

நெல்லை:

தமிழகம் முழுவதும் சமுதாய நல்லிணக்கத்திற்காக அணிவகுப்பு ஊர்வலம் நாளை நடைபெறுவதாக இருந்தது.

நெல்லை மாவட்டத்தில் அம்பை பகுதியில் அங்குள்ள ஒரு தியேட்டரில் தொடங்கி பல்வேறு பஜார் தெருக்கள் வழியாக ஊர்வலத்திற்கு அவர்கள் அனுமதி கேட்டனர். ஆனால் பிரச்சினை ஏற்படாத வண்ணம் அம்பையில் ஏதேனும் விளையாட்டு அரங்கம் அல்லது திருமண மண்டபங்களில் ஊர்வலத்தை நடத்தி கொள்ள வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுவரை ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் அதற்கான இடத்தை தேர்வு செய்து தெரிவிக்கவில்லை. இதனால் நெல்லையில் ஊர்வலம் நடத்த வாய்ப்பில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் வி.வி.டி. சிக்னல் அருகே காமராஜ் கல்லூரியில் இருந்து ஊர்வலம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அங்கும் ஊர்வலத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அனுமதி மறுத்தார்.

மாற்று இடத்தில் அங்குள்ள உள்விளையாட்டு அரங்கில் நடத்தி கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அதற்கு ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் அங்கும் நாளை ஊர்வலம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை சென்னை உயர்நீதிமன்றம் சங்கரன்கோவிலில் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி வழங்கியது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக சங்கரன்கோவில் பகுதியில் திறந்த வெளியில் ஊர்வலத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அனுமதி மறுத்தார். இதனால் அங்கு நடைபெற இருந்து ஊர்வலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Tags:    

Similar News