தமிழ்நாடு

மதுரையில் கடையில் புகுந்து ரூ.10 லட்சம் திருடிய வடமாநில வாலிபர்-3 சிறுவர்கள் கைது

Update: 2023-03-20 08:56 GMT
  • தனிப்படை போலீசார் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒரு வாலிபர் மற்றும் 3 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர்.
  • வேலை தேடி வந்து மதுரையில் தங்கியிருந்த நிலையில் வடமாநில வாலிபர் கொள்ளையில் ஈடுபட்டது வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை:

மதுரை சின்ன கண்மாய் தெருவை சேர்ந்தவர் முருகவேல். இவர் அம்மன் சன்னதி விட்டவாசல் பகுதியில் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். இங்கு தினமும் பல லட்ச ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறும்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு முருகவேல் கடையை பூட்டி விட்டு சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கடையின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கு கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் ரொக்க பணத்தை திருடி சென்று விட்டனர்.

இதுபற்றி அறிந்த முருகவேல் அதிர்ச்சி அடைந்தார். அவர் கடையில் ரூ.10 லட்சம் கொள்ளை போனது பற்றி விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமராக்களை அடித்து நொறுக்கி விட்டு கைவரிசையை காட்டியது தெரிய வந்தது. இருந்தபோதிலும் ஒரு கேமராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது.

கொள்ளையில் ஈடுபட்ட வாலிபரின் முகம் மற்றும் உடல் பகுதியை மறைக்கும் வகையில் ஆடை அணிந்து சென்று திருடியது கண்டறியப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சாய் பிரனீத் தலைமையில் மீனாட்சி கோவில் போலீஸ் சரக உதவி கமிஷனர் காமாட்சி மேற்பார்வையில் விளக்குத்தூண் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒரு வாலிபர் மற்றும் 3 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள்தான் கொள்ளையில் ஈடுபட்டது உறுதியானது.

பிடிபட்ட வாலிபர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இர்ஷாத் என்பவரின் மகன் ஷபாஸ் (வயது 21) என்பதும், அவருக்கு உடந்தையாக செயல்பட்டவர்களில் 2 பேர் அவரது சகோதரர்கள் என்பதும், இன்னொருவர் உறவினர் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக கொள்ளையன் ஷபாஸ் அளித்துள்ள வாக்குமூலத்தில், வேலை தேடி மதுரைக்கு வந்ததாகவும், அப்போது திருட்டில் ஈடுபட முடிவு செய்து திரிந்தபோது சம்பந்தப்பட்ட கண்ணாடி கடையில் தினமும் பல லட்ச ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறுவதை பார்த்ததும் அங்கு கொள்ளையடிக்க திட்டமிட்டதாகவும், இதற்காக அவர் தனது சகோதரர்கள் மற்றும் உறவினரை அழைத்து வந்து கொள்ளை திட்டத்தை அரங்கேற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

வேலை தேடி வந்து மதுரையில் தங்கியிருந்த நிலையில் வடமாநில வாலிபர் கொள்ளையில் ஈடுபட்டது வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News