தமிழ்நாடு

மிச்சாங் புயலால் அரிசி விலை "திடீர்" உயர்வு

Published On 2024-01-31 07:14 GMT   |   Update On 2024-01-31 07:14 GMT
  • ஆந்திரா, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு அதிக அளவில் அரிசி விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
  • நெல்லின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது.

சென்னை:

சென்னையில் அரிசி விலை திடீரென உயர்ந்துள்ளது. ரூ.1300-க்கு விற்பனையான 25 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.100 அதிகரித்து ரூ.1400-க்கு விற்பனையாகிறது.

இதேபோன்று அரிசியின் தரத்தை பொறுத்து அனைத்து மூட்டைகளும் 100 முதல் 200 ரூபாய் வரையில் உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது அறுவடை காலம் ஆகும். இந்த நேரத்தில் அரிசியின் விலை சற்று குறைந்திருக்கும். ஆனால் தற்போது விலை ஏறி உள்ளது என்று கூறியிருக்கும் வியாபாரிகள் மிச்சாங் புயலும் இதற்கு ஒரு காரணம் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக அரிசி மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

ஆந்திரா, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு அதிக அளவில் அரிசி விற்பனைக்கு கொண்டு வரப்படும். மிச்சாங் புயல் பாதிப்பால் அறுவடை நேரத்தில் காற்று அதிகமாகி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் பரப்பளவில் 30 மூட்டைகள் விளையும் இடத்தில் புயல் பாதிப்பு காரணமாக 18 மூட்டை நெல்லே உற்பத்தியாகி உள்ளது. இதனால் நெல்லின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது.

அறுவடை நேரத்தில் காற்று அதிகமாக வீசியதன் மூலம் நெற்பயிரில் பால் சிதறி தரமும் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே அரிசியின் விலை உயர்ந்துள்ளது. கிலோவுக்கு ரூ.4 வரையிலும் விலை அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News