தமிழ்நாடு

வாக்குறுதியை மீறினால் மீண்டும் போராட்டம்- சிஐடியு சவுந்தரராஜன் பரபரப்பு பேட்டி

Published On 2023-05-31 14:53 GMT   |   Update On 2023-05-31 14:53 GMT
  • பேச்சுவார்த்தையில் ஒப்பந்த முறையை நிறுத்தி வைப்பதாக கூறியுள்ளனர்.
  • விரைவாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் மொத்தம் 3,233 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் தினமும் 30 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் பயணம் செய்கின்றனர்.

மாநகர பஸ்களில் சாதாரண ஒயிட் போர்டு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர்.

திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளும் பயண சலுகையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒவ்வொரு பணிமனையிலும் 'ஸ்பேர் பார்ட்ஸ்' இல்லாத காரணத்தால் 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளதாக தொழிற்சங்கத்தினர் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.

இதற்கிடையே போக்குவரத்து கழகத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக உலக வங்கி நிதி உதவியுடன் இந்த ஆண்டு 500 மின்சார பஸ்களை வாங்க அரசு முடிவு செய்துள்ளது.

அடுத்த ஆண்டும் 500 பஸ்கள் வாங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. புதிதாக வாங்கப்படும் மாநகர பஸ்களை அரசு-தனியார் பங்களிப்புடன் ஓட்டுவதற்கு சாத்தியக்கூறுகளை போக்குவரத்து துறை ஆராய்ந்து வந்தது.

இதற்கு தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்பட பல்வேறு சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் 12 போக்குவரத்து பணிமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் (காண்டிராக்ட்) 400 ஊழியர்கள் நியமிக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகர பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் மத்தியில் நேற்று மாலையில் வேகமாக தகவல் பரவியது.

இதனால் மாநகர பஸ் டிரைவர்கள் திடீரென்று ஆங்காங்கே பஸ்களை நிறுத்தி பயணிகளை கீழே இறக்கிவிட்டு போராட்டத்தில் குதித்தனர்.

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு இந்த தகவல் தெரியவந்ததும் அவர் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று பஸ் ஊழியர்கள் தொழிற்சங்கத்தினரிடம் வற்புறுத்தி வருகின்றனர். இதனால் பஸ் ஊழியர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை எடுத்து சொல்லவும், போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க கூடாது என்பதை பற்றி வலியுறுத்தி பேசவும் தொ.மு.ச. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி. போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டியை இன்று சந்தித்து பேசினார்.

அவருடன் தொ.மு.ச. தொழிற்சங்க நிர்வாகிகளும் சென்று சந்தித்தனர். அதன்பிறகு தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரையும் சந்தித்து பேசினர்.

இந்நிலையில், அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை அடுத்து சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் பேட்டி அளித்தார். அப்போது அவர், பேச்சுவார்த்தையில் ஒப்பந்த முறையை நிறுத்தி வைப்பதாக கூறியுள்ளனர். வாக்குறுதியை மீறினால் மீண்டும் போராட்டம் நடக்கும்.

வரும் 9-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். விரைவாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News