தமிழ்நாடு செய்திகள்

மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்று: ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

Published On 2023-11-14 11:07 IST   |   Update On 2023-11-14 11:07:00 IST
  • மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்க செல்லும் படகுகள் அந்தந்த துறைமுகங்களில் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டுள்ளது.
  • தீபாவளியை முன்னிட்டு 2 நாட்கள் கடலுக்கு செல்லவில்லை.

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி என இரண்டு கடல் பகுதிகள் உள்ளன. இதில், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தேவிபட்டணம், சோழிய குடி, தொண்டி உள்ளிட்ட பகுதி மீனவர்கள் பாக்ஜல சந்தி கடல் பகுதியில் மீன் பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர்.

இதேபோன்று தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு அமையம் அறிவித்துள்ளது.

இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் ஆகிய பகுதிகளில் இருந்து விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மீன் பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்க செல்லும் படகுகள் அந்தந்த துறைமுகங்களில் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே மண்டபம் கடலோர பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் சுழற்சி முறையில் பாக்ஜலசந்தி கடலோர பகுதியிலும், மன்னார்வளைகுடா கடலோர பகுதியிலும் மீன்பிடிக்க செல்வது வழக்கம்.

அதில் குறிப்பாக சாயல்குடி, தாமரைக்குளம், உச்சிப்புளி, புதுமடம், பிரப்பன்வலசை, நொச்சியூரணி, சுந்தரமுடையான், பிள்ளைமடம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடந்த 8-ந்தேதி கடலுக்கு சென்றுவிட்டு 9-ந்தேதி கரை திரும்பினர். தீபாவளியை முன்னிட்டு 2 நாட்கள் கடலுக்கு செல்லவில்லை.

இந்தநிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதால் வாரத்தின் முதல்நாளான நேற்று குறைந்த அளவிலேயே மீனவர்கள் கடலுக்கு சென்றனர். மற்ற விசைப்படகுகள் மண்டபம் தெற்குவாடி, துறைமுகம் ஆகிய பகுதிகளில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

Tags:    

Similar News