தமிழ்நாடு செய்திகள்

ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

Published On 2023-09-01 13:55 IST   |   Update On 2023-09-01 13:55:00 IST
  • ராமேசுவரம் மீனவர்கள் சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.
  • ராமேசுவரத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

ராமேசுவரம்:

ராமேசுவரத்தில் இருந்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் வாரத்தில் 3 நாட்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள். இதேபோல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு சென்று வருகின்றனர்.

இதில் ராமேசுவரம் மீனவர்களுக்கு பல டன் கணக்கில், பல்வேறு வகையான மீன்கள் கிடைக்கின்றன. உள்ளூர் தேவைகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்து மீன்கள் பதப்படுத்தி அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் ராமேசுவரம் மீனவர்கள் சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்தும் வருகிறார்கள்.

அவ்வாறு மீனவர்களிடம் இருந்து மீன்களை வாங்கி ஏற்றுமதி வணிகம் செய்துவரும் நிறுவனங்கள் போதிய விலை தருவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அந்த நிறுவனங்கள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டு விலையை நிர்ணயம் செய்து கொள்கிறது.

இதனால் மீனவர்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். பல்வேறு சிரமங்களுக்கு இடையே மீனவர்கள் பிடித்து வரும் விலை உயர்ந்த ஏற்றுமதி தரம் வாய்ந்த மீன்களுக்கு குறைந்த விலை கிடைப்பதால் வாழ்வாதாரம் நலிவடைந்து விட்டதாகவும், உரிய விலை கிடைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதிலும் ஏற்றுமதி நிறுவனங்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர்.

இதனை கண்டித்து ராமேசுவரத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு கடலில் ஏற்பட்ட மாறுபட்ட நீரோட்டத்தால் மீன்கள் வரத்தும் குறைந்துள்ள நிலையில் மீனவர்கள் அறிவித்துள்ள இந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News