தமிழ்நாடு

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை அறிக்கை 2 வாரத்தில் தாக்கல்- மர்ம முடிச்சு அவிழுமா?

Published On 2023-01-24 07:20 GMT   |   Update On 2023-01-24 07:20 GMT
  • சென்னையில் கடந்த 18-ந் தேதி அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை தொடங்கி நடந்து முடிந்து உள்ளது.
  • கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வரும் ராமஜெயம் கொலை வழக்கில் நிலவி வரும் மர்ம முடிச்சுகள் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை:

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், திருச்சியை சேர்ந்த தொழில் அதிபருமான ராமஜெயம் கடந்த 2010-ம் ஆண்டு நடைபயணம் சென்றபோது மர்ம கும்பலால் கடத்தி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ஜெயக்குமார், தலைமையில் டி.எஸ்.பி. மதன் சென்னை சி.பி.சி.டி.ஐ.யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் சந்தேக வளையத்துக்குள் சிக்கிய மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார், சத்யராஜ், செந்தில், கலைவாணன், சுரேந்திரன், சாமி ரவி, மாரிமுத்து, சிவா ஆகிய 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சென்னையில் கடந்த 18-ந் தேதி அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை தொடங்கி நடந்து முடிந்து உள்ளது. அவர்களிடம் ராமஜெயம் குறித்து தடயவியல் நிபுணர்கள் கேள்வி கேட்டு பதில்கள் பெற்றனர்.

இந்த சோதனை தொடர்பாக அனைத்து விவரங்களையும் அறிக்கையாக தயாரிக்கும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அறிக்கையை சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் வழங்க உள்ளனர். அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையினை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மேற்கொள்ள உள்ளனர்.

உண்மை கண்டறியும் சோதனை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 வாரத்தில் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வரும் ராமஜெயம் கொலை வழக்கில் நிலவி வரும் மர்ம முடிச்சுகள் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News