தமிழ்நாடு செய்திகள்

புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகரில் 50 வீடுகளில் மழை நீர் புகுந்தது

Published On 2022-11-11 14:17 IST   |   Update On 2022-11-11 14:17:00 IST
  • பழமையான குடிசை மாற்று வாரிய குடியிருப்பிலும் தண்ணீர் தேங்கி உள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
  • மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில் தங்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராயபுரம்:

சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக தாழ்வான குடியிருப்புகளில் மழை நீர் புகுந்துள்ளது.

புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகரில் 18 தெருக்கள் உள்ளது. இந்த பகுதியில் ஒவ்வொரு மழைக்காலத்திலும் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.

இங்கு சுமார் 50 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இந்த தண்ணீரை பாதிக்கப்பட்ட மக்களே ஆபத்தான முறையில் சிறிய மின் மோட்டார் வைத்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக பெரும்பாலான வீடுகளில் சொந்தமாக சிறிய மின் மோட்டாரை வாங்கி வைத்துள்ளனர்.

இந்த பகுதியில் இருந்து மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில் தங்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அங்குள்ள பழமையான குடிசை மாற்று வாரிய குடியிருப்பிலும் தண்ணீர் தேங்கி உள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

ராயபுரம் லோட்டஸ் ராமசாமி தெரு, ராஜகோபால் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை ஜி.பி.ரோடு, ரெயில்வே சுரங்க பாதை பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது. கண்ணன் ரவுண்டானா, ராமதாஸ் நகர், போஜராஜன் நகர், கொருக்குப்பேட்டை கத்திவாக்கம் நெடுஞ்சாலை, கே.என்.எஸ். டிப்போ பகுதி, புதுவண்ணாரப்பேட்டை இளைய முதலி தெரு, தேசிய நகர், மார்க்கெட் பாரம் பகுதியிலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

தண்டையார்பேட்டை சேணியம்மன் கோவில் தெரு, இரட்டை குழி தெரு, வீரா குட்டி தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, கைலாசம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

Tags:    

Similar News