தமிழ்நாடு

ஈரோட்டில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா வாகன பேரணி- கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்

Published On 2023-03-28 10:00 GMT   |   Update On 2023-03-28 10:00 GMT
  • முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதும் சமாதானம் ஏற்பட வாய்ப்பு கிட்டுமா என எதிர்பார்க்கப்பட்டது.
  • வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்தது.

ஈரோடு:

கேரள மாநிலம் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் சோமநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலை சுற்றியிருந்த தெருக்களில் பிற சாதியினர் நடக்க கூடாது என்கிற நடைமுறை பல ஆண்டு காலங்களாக இருந்து வந்தது.

இந்நிலையில் ஸ்ரீ நாராயணகுருவின் சீடரும், காங்கிரசு பேரியக்கத்தை சேர்ந்தவருமான டி.கே. மாதவன் என்பவர் இப்பிரச்சனைக்காக போராட முன் வந்தார். இதற்காக 1924-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ந் தேதி காலை 6 மணிக்கு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதுதான் வைக்கம் போராட்டத்தின் முதல் போராட்டமாகும்.

இந்த அறவழி போராட்டம் தொடர்ந்து நடந்தது. முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதும் சமாதானம் ஏற்பட வாய்ப்பு கிட்டுமா என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து அறவழியிலேயே போராடிக் கொண்டிருந்தனர்.

இதனையடுத்து படிப்படியாகத் தலைவர்கள் கைது செய்யப்பட்டவுடன் போராட்டம் தொய்வடையும் நிலையில் ஈ.வெ.ரா. பெரியாருக்கு ஒரு கடிதம் எழுதினர். அதில் "நீங்கள் இங்கு வந்து இந்த போராட்டத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் மன்னிப்பு கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. அவ்வாறு செய்தால் ஒரு பெரிய காரியம் கெட்டு விடுமே என்று கவலைப்படுகிறோம்" என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் பெரியார் வைக்கம் விரைந்தார். களத்தில் இறங்கி சத்தியாகிரகம் செய்ய தொடங்கினார். பெரியார் சூறாவளி போல் சுற்றி வந்து சூடு பறக்கும் சொற்களால் மக்களைத் தீண்டாமை கொடுமைக்கெதிராக தட்டியெழுப்பினார். ஈ.வே.ரா. பெரியாரின் பேச்சு கேரள மக்களை அதிகமாக கவர்ந்தது. இதனால் அங்கிருந்த போலீசாரால் ஈ.வே.ரா பெரியார் 1924-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

பின்னர் தண்டனைக்காலம் முடிவடைந்த பின்பு ஈ.வே.ரா. பெரியார் விடுதலையானார். விடுதலையான ஈ.வே.ரா. பெரியார் பின்னர் அங்கிருந்து ஈரோட்டிற்கு திரும்பி வந்தார். பின்னர் பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பின்பு 1925-ம் ஆண்டு நவம்பர் மாதம் வைக்கம் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட கேரளா மாநில காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்தது. அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து வைக்கம் போராட்டத்தில் பங்கெடுத்து கொண்ட தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் கேரளா மாநில காங்கிரஸ் சார்பாக நினைவு பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் அருகே வைக்கம் நூற்றாண்டு நினைவு பேரணி தொடக்க விழா நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவரை அமைச்சர் முத்துசாமி வரவேற்றார். பின்னர் பன்னீர்செல்வம் படத்தில் உள்ள பெரியார் சிலை, கருணாநிதி சிலைக்கு கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து வாகன பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News