தமிழ்நாடு

நெல்லை, தூத்துக்குடியில் எந்திரங்கள் பழுதால் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

Published On 2024-04-19 09:20 GMT   |   Update On 2024-04-19 09:20 GMT
  • ஒரு சில வாக்குப்பதிவு மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது காரணமாக ஓட்டுப்பதிவு சற்று தாமதமானது.
  • மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

நெல்லை:

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். எனினும் ஒரு சில வாக்குப்பதிவு மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது காரணமாக ஓட்டுப்பதிவு சற்று தாமதமானது.

நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த கீரைக்காரன்தட்டு டி.டி.றி.ஏ. நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் எந்திர கோளாறால் 45 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும் எந்திர கோளாறு காரணமாக பெட்டைக்குளம் காதர் மீராசாகிப் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில்15 நிமிடமும், நவ்வலடி பள்ளியில் 10 நிமிடமும் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

களக்காட்டில் உள்ள கோமதி அருள்நெறி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பேட்டரியில் சார்ஜ் இல்லாததால் வாக்குப்பதிவு எந்திரம் இயங்கவில்லை. இதனால் மாதிரி வாக்குப்பதிவு தாமதமானது. பின்னர் மாற்று பேட்டரிகள் வரவழைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.

நெல்லை மாநகரில் தச்சநல்லூர் அருகே ஊருடையான் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதாகின. உடனடியாக அந்த பழுது சரிபார்க்கப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், பொன்னம்பாறை, அரசூர், புதுக்குளம், தச்சன்விளை ஆகிய 5 இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறால் ஓட்டுப்பதிவு சிறிது நேரம் தாமதமானது.

Tags:    

Similar News