தமிழ்நாடு

விருத்தாசலம் போலீசார் புதுக்கூரைப்பேட்டையில் விசாரணை நடத்தியபோது எடுத்தபடம்.

விருத்தாசலத்தில் குற்றவாளிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை

Published On 2023-10-31 06:07 GMT   |   Update On 2023-10-31 06:07 GMT
  • போலீசாரால் தேடப்படும் குற்றவாளிகள், அவரது கூட்டாளிகள் வீடுகளில் ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தி சோதனை செய்தனர்.
  • ஆய்வு மற்றும் சோதனை இன்று காலை 6 மணி முதல் நடந்து வருகிறது.

விருத்தாசலம்:

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள், தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளியில் வந்தவர்கள் ஆகியோரின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய போலீஸ் தலைமையகம் உத்தரவிட்டது.

அதன்படி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் உத்தரவின் பேரில் விருத்தாசலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டு 50-க்கும் மேற்பட்டோரின் பட்டியலை தயார் செய்தனர்.

அவர்களின் தற்போதைய நிலை குறித்து விசாரிக்க விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான டெல்டா போலீசார் இன்று காலை தனி வாகனத்தில் புறப்பட்டனர். விருத்தாசலம் நகரம், புதுக்கூரைப்பேட்டை, குப்பநத்தம், மணவாளநல்லூர் போன்ற கிராமங்களில் ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது, தலைமறைவாக உள்ள குற்றவாளிகள், அவர்களின் குடும்பத்தாருடன் தொடர்பில் உள்ளனரா? எங்கு பதுங்கியுள்ளனர்? பழைய குற்றவாளிகள் மீண்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனரா? அவர்கள் தற்போது என்ன செய்கிறார்கள்? போன்றவை குறித்து விசாரணை நடத்தினர்.

மேலும், போலீசாரால் தேடப்படும் குற்றவாளிகள் மற்றும் அவரது கூட்டாளிகள் வீடுகளில் ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தி சோதனை செய்தனர். இந்த ஆய்வு மற்றும் சோதனை இன்று காலை 6 மணி முதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் விருத்தாசலம் பகுதியில் திடீர் பரபரப்பு நிலவுகிறது.

Tags:    

Similar News