தமிழ்நாடு

ஆவடியில் 1,100 ரவுடிகளின் நடவடிக்கைகள் கண்காணிப்பு: போலீஸ் கமிஷனர் சங்கர் தகவல்

Published On 2023-11-24 06:20 GMT   |   Update On 2023-11-24 06:20 GMT
  • ஆவடி காவல் ஆணையரகத்தில் ரவுடிகளை கண்காணிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • ரவுடிகள் அதிகம் வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து அவர்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டு உள்ளனர்.

திருநின்றவூர்:

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரவுடிகளை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடிகளின் வீடுகளுக்கு போலீசார் நேரடியாக சென்று சோதனை நடத்தி அவர்களது நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய இருப்பிடம் குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் ஆவடி பகுதியில் 1100 ரவுடிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சங்கர் வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆவடி காவல் ஆணையரகத்தில் ரவுடிகளை கண்காணிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரவுடிகள் அதிகம் வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து அவர்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டு உள்ளனர். இதுவரை சுமார் 1,100 ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கப்பட்டு 980 வீடுகள் மற்றும் தங்குமிடங்கள் சோதனையிடப்பட்டது. இதில் கத்தி, கஞ்சா உள்ளிட்ட சட்ட விரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

சுமார் 287 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 431 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 107 பேர் மீதான பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும் 479 ரவுடிகளிடம் நன்னடத்தை பிணையம் பெறப்பட்டுள்ளது. 141 ரவுடிகள், 46 திருட்டு மற்றும் வழிப்பறி குற்றவாளிகள், 40 போதைப்பொருள் குற்றவாளிகள் மற்றும் 13 இதர முக்கிய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என சுமார் 240 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முக்கிய ரவுடிகள் மீதான வழக்குகளை கண்காணித்து, தலைமறைவான எதிரிகளை பிடிக்கவும் அவர்களை நீதிமன்ற விசாரணையின்போது தொடர்ந்து ஆஜர்படுத்தி வழக்கை விரைந்து முடிக்கவும், தண்டனை பெற்று தரவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வரும் பிணையில் உள்ள ரவுடிகளின் பிணைகளை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தொழில் அதிபர்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி மாமுல் வசூலிக்கும் ரவுடிகளின் மீது மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அவ்வாறு அவர்கள் பெற்ற பணத்தில் அவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் பெயர்களில் வாங்கப்பட்ட அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ரவுடிகளின் மீதான நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News