பிரதமர் மோடி ராமேசுவரத்தில் இரவு தங்க உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்
பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு வளையத்தில் ராமேசுவரம்
- பிரதமர் வருகையை முன்னிட்டு மண்டபம் முகாம் ஹெலிபேட் தளத்தில் மராமத்து பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- தனுஷ்கோடி, கோதண்டராமர் கோவில் உள்ள பகுதிகளில் மத்திய, மாநில உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியை தொடங்கி உள்ளனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் ஸ்ரீராமன், சீதையால் பூஜிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன் ஆலயமாகும். இந்துக்களின் புனித ஸ்தலங்களில் ராமேசுவரம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக திகழ்கிறது.
உத்தரபிரேதச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி ராமரின் குழந்தை வடிவிலான சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளார்.
இதற்காக கடந்த 12-ந்தேதி முதல் விரதம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி 20-ந்தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் கேம்ப் வருகை தர உள்ளார். ராமரின் வாழ்க்கை வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடைய ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கிறார். அப்போது 22 தீர்த்தங்களிலும் புனித தீர்த்தத்தை சேகரிக்கிறார். பின்னர் சுவாமி, அம்பாளை தரிசனம் செய்வதுடன் சிறப்பு பூஜையிலும் கலந்து கொள்கிறார்.
இதன் பின் மேற்கு வாசல் பகுதியில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் இரவு தங்கி ஓய்வு எடுத்துக்கொள்கிறார். 21-ந்தேதி காலை ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ. தொலைவில் உள்ள விபீஷணனுக்கு ஆறுதல் கூறிய வரலாற்றை எடுத்துரைக்கும் கோதண்டராமர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து சிறப்பு வழிபாட்டிலும் கலந்துகொள்கிறார்.
பின்னர் கலசத்தில் சேகரித்த, 22 புனித தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு அன்று காலை 11.20 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதியம் 12.20 மணிக்கு மதுரை விமான நிலையம் செல்கிறார். 12.25 மணிக்கு விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி மண்டபத்தில் உள்ள ஹெலிபேடு தயார்படுத்தும் பணி நடைபெற்று வரும் காட்சி
முன்னதாக பிரதமர் வருகையை முன்னிட்டு மண்டபம் முகாம் ஹெலிபேட் தளத்தில் மராமத்து பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ராமேசுவரத்திற்கு பிரதமர் வருகையை முன்னிட்டு சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்துறையினர் கப்பல்கள் மற்றும் கரையோரம் பகுதிகளில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அதிவேக ரோந்து படகுகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதே போன்று ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகள் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் செ.சிவ ராம்குமார் தலைமையில் தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி உள்ளனர்.
பிரதமர் மோடி இரவு ஓய்வு எடுக்கும் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 பேர் முதல்கட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தனுஷ்கோடி, கோதண்டராமர் கோவில் உள்ள பகுதிகளில் மத்திய, மாநில உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியை தொடங்கி உள்ளனர். மண்டபத்தில் ஹெலிகாப்டர் தரை இறக்கி பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்ள உள்ளனர்.
முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது ராமேசுவரம் வருகை தந்த பிரதமர் மோடி, தற்போது சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.