தமிழ்நாடு

சென்னையில் மாநகர பஸ்களை அதிகரிக்க திட்டம்

Published On 2022-06-22 04:00 GMT   |   Update On 2022-06-22 04:00 GMT
  • மாநகர பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
  • விரைவில் சென்னையில் கூடுதல் பஸ்கள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை:

சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு மொத்தம் 31 பணிமனைகள் உள்ளன. இங்கிருந்து 3,454 பஸ்கள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. தினசரி 27.54 லட்சம் பேர் மாநகர பஸ்களில் பயணம் செய்து வருகிறார்கள்.

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்பட்ட தொழிற்சாலைகள், ஐ.டி. நிறுவனங்கள் முழு அளவில் செயல்படத் தொடங்கி விட்டது. மேலும் தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது.

இதனால் மாநகர பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஏராளமான மாணவ-மாணவிகள் அரசு பஸ்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

மேலும் சாதாரண கட்டண பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்பதால் அலுவலகங்களுக்கு செல்லும் பெண்களும் தற்போது அதிக அளவில் மாநகர பஸ்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

இதனால் காலை, மாலை நேரங்களில் மாநகர பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதையடுத்து கூடுதல் பஸ்களை இயக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து சென்னையில் மாநகர பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையை அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்.

புதிய வழித்தடங்கள் குறித்து ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. எனவே விரைவில் சென்னையில் கூடுதல் பஸ்கள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும்போது, "சென்னையில் எந்தெந்த வழித்தடங்களில் புதிதாக பஸ்களை இயக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இப்பணி விரைவில் முடிவடையும். இதன் பின்னர் தேர்வு செய்துள்ள வழித்தடங்களில் எத்தனை பஸ்களை இயக்கலாம்? எவ்வளவு மக்கள் பயன் பெறுவார்கள்? எந்தெந்த பகுதிகளுக்கு பஸ் சேவை கிடைக்கும், பஸ்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களை தயார் செய்து அரசுக்கு அளிப்போம். அரசு பரிசீலனை செய்து புதிய வழித்தடங்களில் பஸ்களை இயக்க அனுமதி அளிக்கும்" என்றார்.

Tags:    

Similar News