தமிழ்நாடு செய்திகள்

ஏற்காட்டில் இன்று அதிகாலை அதிகளவில் நிலவிய பனிமூட்டத்தில் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டது.

40 முறைக்கு மேல் மின்தடை- இருளில் மூழ்கிய ஏற்காடு பொதுமக்கள் அவதி

Published On 2023-07-26 09:50 IST   |   Update On 2023-07-26 09:50:00 IST
  • மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள், முகப்பு விளக்குகளை எரியவிட்டு ஊர்ந்தபடி செல்கின்றன.
  • கடும் குளிரால் பொதுமக்கள் 2-வது நாளாக வீடுகளிலேயே தஞ்சமடைந்துள்ளனர்.

ஏற்காடு:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக ஏற்காட்டில் கடந்த 3 நாட்களாக சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது.

நேற்று முன்தினம் மாலை தொடங்கிய சாரல் மழை இடைவிடாமல் பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

மழையுடன் காற்றின் வேகமும் அதிகமாக இருப்பதால், ஏற்காட்டில் குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் உள்ளூர்வாசிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

இடை இடையே பனிமூட்டமும் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள், முகப்பு விளக்குகளை எரியவிட்டு ஊர்ந்தபடி செல்கின்றன.

இதனிடையே காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் அதற்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஏற்காட்டில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பங்கள் மற்றும் சாலையில் விழுந்தது.

இதனால் ஏற்காடு முழுவதும் நேற்றிரவு முதல் இன்று காலை வரை சுமார் 40 முறைக்கு மேல் மின்தடை ஏற்பட்டது.

இதனை அதிகாரிகள் சீர் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மழை மற்றும் பனிக்காற்றின் காரணமாக ஏற்காட்டில் காபி விவசாய தொழில் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டது.

அதேபோல் கடும் குளிரின் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்துள்ளது. இதனால், ஏற்காட்டில் உள்ள பூங்காக்கள், பல்வேறு காட்சி முனைகள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

கடும் குளிரால் பொதுமக்கள் 2-வது நாளாக வீடுகளிலேயே தஞ்சமடைந்துள்ளனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News