தமிழ்நாடு

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

Published On 2024-04-19 05:53 GMT   |   Update On 2024-04-19 05:53 GMT
  • நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து 16 லட்சத்து 54 ஆயிரத்து 503 வாக்காளர்கள் உள்ளனர்.
  • பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டு போட்டனர்.

நெல்லை:

தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதனையொட்டி மாவட்டம்தோறும் அதற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் நேற்றே செய்து முடிக்கப்பட்டன.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இன்று காலை முதல் வாக்குப்பதிவு தொடங்கியது.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து 16 லட்சத்து 54 ஆயிரத்து 503 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிப்பதற்காக 1,810 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இதற்காக அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து நேற்று மதியத்திற்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு வாக்குச்சாவடிகளுக்கு அரசியல் கட்சியினரின் பூத் ஏஜெண்டுகள் வந்து சேர்ந்தனர். அவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் மாதிரி ஓட்டு போட்டு காண்பித்தனர். தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டு போட்டனர்.

கிராமங்கள் தொடங்கி நகர்புறங்கள் வரையிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். ஒருசில பூத்களில் வாக்குப்பதிவு சற்று தாமதமாக தொடங்கியது.

நெல்லை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான கார்த்திகேயன் பாளை தூய யோவான் பள்ளியில் ஓட்டு போட்டார். தொடர்ந்து அவர் வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் வந்து வாக்களிப்பதற்காக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்கள் தன்னார்வலர்கள் உதவியுடன் நாற்காலியில் அழைத்துச்செல்லப்பட்டு ஓட்டுப்போட்டு சென்றனர். ஒரு சில மையங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்ப்பதற்காக காத்திருப்பு மையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் முதல் முறையாக ஓட்டுப்போட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோர் மிகவும் மகிழ்ச்சியுடன் வாக்குச்சாவடிகளில் இருந்து வெளியே வந்தனர். அவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஓட்டுப்போட்டுவிட்டு வெளியே வந்தபின்னர் மை வைத்த விரலை நீட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

தென்காசி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,743 வாக்குச்சாவடிகளிலும் இன்று காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குப்பதிவு செய்துவிட்டு சென்றனர். தென்காசி(தனி) தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 16 ஆயிரத்து 183 வாக்காளர்கள் உள்ள நிலையில் காலை முதலே பெரும்பாலானோர் ஓட்டுப்பதிவு செய்தனர்.

இதனையொட்டி தென்காசி பாராளுமன்ற தொகுதி முழுவதும் பதற்றமான 106 வாக்குச்சாவடிகள், மிக பதற்றமான 14 வாக்குச்சாவடிகளில் போலீசாருடன் துணை ராணுவத்தினரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளை கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கமல் கிஷோர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக கலெக்டர் கமல் கிஷோர் தென்காசி மஞ்சம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வாக்கினை பதிவு செய்தார். ஒரு சில வாக்குப்பதிவு மையங்களில் எந்திரங்கள் பழுது காரணமாக ஓட்டுப்பதிவு சற்று தாமதமானது. எனினும் உடனடியாக எந்திரங்கள் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் ஓட்டுப்பதிவு தொடங்கியது.

அதேநேரத்தில் காலையில் இருந்து வெயிலின் தாக்கமும் சற்று அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து நீண்ட வரிசையில் ஓட்டுப்போட காத்திருந்த வாக்காளர்களின் வசதிக்காக சாமியானா பந்தல், ஓலை பந்தல் உள்ளிட்டவைகளும் போடப்பட்டிருந்தது. இதேபோல் வாக்குச்சாவடிகள் முன்பு குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 58 ஆயிரத்து 430 பேர் வாக்களிக்க தயாராக உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக தொகுதி முழுவதும் மொத்தம் 1,624 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இன்று காலை முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டதோடு, துணை ராணுவத்தினரும் பணியில் இருந்தனர்.

இன்று காலை 6 மணிக்கு பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. அதைத்தொடர்ந்து 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் அதிக அளவில் வந்து வாக்களித்து சென்றனர். வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்லும்போது செல்போன் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டது.

தொகுதி முழுவதும் தேர்தல் வாக்குப்பதிவு பணிகளை மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அரசியல் கட்சியினர் மேசைகள் போட்டு அமர அனுமதிக்கப்பட்டிருந்தனர். முன்னதாக அனைத்து வாக்குச்சாவடிகளின் நுழைவு வாயில் பகுதிகளிலும் சுத்தப்படுத்தப்பட்டு பிளீச்சிங் பவுடரும் தூவப்பட்டது.

Tags:    

Similar News