தமிழ்நாடு செய்திகள்

வேறு சிறுமிகளிடமும் கருமுட்டை எடுக்கப்பட்டதா?- புகாரில் சிக்கிய தனியார் ஆஸ்பத்திரியில் கிடுக்குபிடி விசாரணை

Published On 2022-06-10 10:25 IST   |   Update On 2022-06-10 10:25:00 IST
  • ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள 4 தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவ உயர்மட்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.
  • ஆந்திரா, கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிறுமி கருமுட்டை எடுக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

ஈரோடு:

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள 4 தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவ உயர்மட்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியை போல வேறு ஏதேனும் சிறுமிகளிடம் இதுபோன்று கரு முட்டை எடுத்து விற்கப்பட்டு இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மற்றும் பெருந்துறை தனியார் மருத்துவமனை கருத்தரிப்பு மைய நிர்வாகிகளிடம் ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்திய நிலையில் அந்த 2 தனியார் மருத்துவமனைகளில் இதுவரை கருமுட்டை வழங்கியவர்களின் பட்டியலை, ஆதார் எண் மற்றும் முகவரியுடன் சமர்பிக்குமாறு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

போலி ஆதார் மூலம் வேறு ஏதேனும் சிறுமிகளிடம் இதுபோன்று சட்டவிரோதமாக கருமுட்டை பெறப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக இதுவரை கருமுட்டை வழங்கியவர்களின் பட்டியலை உடனே வழங்கவும் அறிவுறுத்தி உள்ளனர்.

அந்த பட்டியலில் உள்ள ஆதார் உண்மையானதா? என்பதை ஆய்வு செய்தால் வேறு ஏதேனும் சிறுமிகள் இதே போன்று கருமுட்டை விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டனரா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் ஆந்திரா மற்றும் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிறுமி கருமுட்டை எடுக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News