தமிழ்நாடு

காஞ்சிபுரம் பட்டாசு வெடிவிபத்தில் சிகிச்சைபெற்ற மேலும் ஒருவர் பலி

Published On 2023-03-27 08:17 GMT   |   Update On 2023-03-27 08:17 GMT
  • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த குண்ண வாக்கத்தை சேர்ந்த ரவி (வயது49) என்பவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
  • பட்டாசு வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்து உள்ளது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அருகே உள்ள குருவிமலை அடுத்த வளத்தோட்டம் பகுதியில் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 22-ந்தேதி திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

இதில் பட்டாசு ஆலை முழுவதும் தீ பரவி அங்கிருந்த வெடிகள், மூலப்பொருட்கள் வெடித்து சிதறின. இந்த வெடி விபத்தில் காஞ்சிபுரம் பல்லவன் தெருவை சேர்ந்த பூபதி, பள்ளூரை சேர்ந்த முருகன் உள்பட மொத்தம் 9 பேர் சம்பவம் நடந்த அன்றே பலியானார்கள்.

வெடிவிபத்தில் உடல் கருகிய 18 பேர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் நேற்றுமுன்தினம் இரவு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கஜேந்திரன், ஜெகதீஷ் ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த குண்ண வாக்கத்தை சேர்ந்த ரவி (வயது49) என்பவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதனால் பட்டாசு வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்து உள்ளது. இன்னமும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 4 பேர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 2 பேர், காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 9 பேர் என மொத்தம் 15 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

Similar News