தமிழ்நாடு

கொச்சியில் இருந்து நாகை துறைமுகத்துக்கு வரும் பயணிகள் கப்பல்: ஓரிரு வாரத்தில் போக்குவரத்து தொடங்கப்படும்

Published On 2023-10-06 06:11 GMT   |   Update On 2023-10-06 06:11 GMT
  • தோட்டக்கலைத் துறை மூலம் அழகுபடுத்தும் பணி, வர்ணம் பூசும் பணி ஆகிய பணிகள் நடந்து வருகிறது.
  • அரசு துறையினருடன் ஆலோசித்து சோதனை ஓட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு செய்யப்படும்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்தியா-இலங்கை இடையிலான நல்லிணக்க கூட்டு பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்து நாகை துறைமுகத்தில் பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

தோட்டக்கலைத் துறை மூலம் அழகுபடுத்தும் பணி, வர்ணம் பூசும் பணி ஆகிய பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் ஒரு சில நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாகை துறைமுகத்தில் இருந்து 2 பயணிகள் கப்பல்கள் இலங்கைக்கு சென்று வரும் வகையில் இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் 90 சதவீதத்துக்கு மேல் முடிவடைந்துவிட்டது. மேலும் பயணிகள் கட்டணம் நிர்ணயம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து துறைமுக நிர்வாகத்துடன் மத்திய, மாநில அரசு துறையினர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்குவதற்காக கொச்சியில் இருந்து ஒரு கப்பல் சில தினங்களுக்கு முன்பு புறப்பட்டது. இந்த கப்பல் இலங்கை வழியாக நாளை (சனிக்கிழமை) மாலை அல்லது 8-ந் தேதி காலை நாகைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு பிறகு அரசு துறையினருடன் ஆலோசித்து சோதனை ஓட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு செய்யப்படும். இதைத்தொடர்ந்து ஓரிரு வாரத்தில் நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும்.

இதற்கான அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.

Tags:    

Similar News