தமிழ்நாடு

குடியாத்தம் அருகே மாயமான பா.ம.க. பிரமுகர் கிணற்றில் பிணமாக மீட்பு

Update: 2022-11-26 10:06 GMT
  • குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஆகாஷின் தந்தை ஏகாம்பரம் புகார் அளித்தார்.
  • ஆகாஷ் குமார் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது தவறி விழுந்தாரா ? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கூடநகரம் ஊராட்சி பார்வதியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் இவரது மகன் ஆகாஷ் குமார் (வயது 23). பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகராக உள்ளார்.

ஆகாஷ் குமார் கடந்த புதன்கிழமை இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

பின்னர் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது ஆகாஷ் குமார் குறித்து எந்தவித தகவலும் தெரிய வரவில்லை.

இதனையடுத்து குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஆகாஷின் தந்தை ஏகாம்பரம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பார்வதியாபுரம் கிராமத்தில் உள்ள கிணற்றின் அருகே ஆகாஷ் குமாரின் செருப்புகள் கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது ஆகாஷ் குமார் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர்.

ஆகாஷ் குமார் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது தவறி விழுந்தாரா ? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News