தமிழ்நாடு

மயக்க ஸ்பிரே அடித்து பள்ளி குழந்தைகள் 2 பேரை கடத்த முயன்ற மர்ம நபர்கள்

Published On 2023-12-12 09:54 GMT   |   Update On 2023-12-12 09:54 GMT
  • 2 பெண்களும் குழந்தைகளை வலுக்கட்டாயமாக சாக்கு மூட்டைக்குள் திணிக்க முயன்றனர்.
  • குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் பதறியடித்துக்கொண்டு அங்கு ஓடி வந்தனர்.

அருப்புக்கோட்டை:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள சின்னகட்டங்குடி கிராமத்தில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று காலை 8.30 மணியளவில் பள்ளிக்கு வந்த குழந்தைகள் வெளியே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக வந்திருப்பதாக கூறிய இளம்பெண் மற்றும் வாலிபர் ஒருவர் விளையாடி கொண்டிருந்த குழந்தைகளிடம் நைசாக பேச்சுக் கொடுத்தனர்.

அப்போது ஆள்நடமாட்டம் குறைந்தபோது திடீரென அந்த மர்ம நபர்கள் 7, 3 வயதுடைய 2 குழந்தைகளையும் இறுக்கி பிடித்து கொண்டு, தங்கள் மறைத்து வைத்திருந்த மயக்க ஸ்பிரேயை எடுத்து குழந்தைகள் முகத்தில் அடித்தனர். இதனால் பீதியடைந்த குழந்தைகள் கூச்சலிட்டனர். பின்னர் 2 பெண்களும் குழந்தைகளை வலுக்கட்டாயமாக சாக்கு மூட்டைக்குள் திணிக்க முயன்றனர்.

இதற்கிடையில் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் பதறியடித்துக்கொண்டு அங்கு ஓடி வந்தனர். இதைப் பார்த்த மர்ம நபர்கள் இருவரும் குழந்தைகளை அங்கேயே விட்டு விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். குழந்தைகளை கடத்த வந்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பள்ளி முன்பு விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகளை சாக்கு மூட்டையில் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News