தமிழ்நாடு செய்திகள்

ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடும் திட்டம் கைவிடப்படுகிறதா?

Published On 2023-07-31 14:50 IST   |   Update On 2023-07-31 14:50:00 IST
  • கோவை, கன்னியாகுமரி ஆகிய இரண்டு தொகுதிகளும் பா.ஜனதாவுக்கு செல்வாக்கான தொகுதிகளாக பார்க்கப்படுகிறது.
  • ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் எல்லா தொகுதிகளிலும் நிலைமைகள் மாறும் என்பதால் தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் பயத்தில் உள்ளன.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என்ற பேச்சு பல மாதங்களாக அடிபடுகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் அமித்ஷா சென்னை வந்திருந்தபோது தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் பதவிக்கு வரவேண்டும் என்பதே பா.ஜனதாவின் எண்ணம் என்று கூறியது இதை உறுதிப்படுத்தியது.

அதேபோல் அண்ணாமலை யாத்திரையையும் ராமநாதபுரத்தில் இருந்து தொடங்கி இருக்கிறார். அவர் பேசும்போது மோடி இதயத்தால் தமிழராக வாழ்கிறார். மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டும் என்பது எங்களுக்கும் ஆசைதான். ஆனால் கட்சி தலைமை தான் முடிவெடுக்கும் என்றார்.

ஏற்கனவே கடந்த 9-ந்தேதி ஐதராபாத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான பா.ஜனதா மாநில தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டு உள்ளது.

அப்போது காங்கிரஸ் தலைவர்கள் தென்மாநிலங்களில் போட்டியிட்டு வென்றதை சுட்டிக்காட்டி மோடியும் ராமநாதபுரத்தில் போட்டியிடுவது நல்லது. மேலும் இஸ்லாமியர்கள் வெற்றி பெறும் தொகுதியில் வெல்வதன் மூலம் தென் மாநிலங்களில் இந்துக்கள் வாக்குகளை ஒருங்கிணைக்கவும், இஸ்லாமியர்கள் வாக்குகளை பெறும் வாய்ப்பாகவும் அமையும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்திரா, ராகுல் ஆகியோர் தென்மாநிலங்களில் போட்டியிட்டாலும் காங்கிரசுக்கு 30 சதவீத வாக்குகள் இருந்ததே அவர்களின் வெற்றிக்கு காரணம்.

ஆனால் தமிழகத்தில் அந்த நிலைமை இல்லை. பா.ஜனதாவின் வாக்கு சதவீதம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஒற்றை இலக்க வாக்கு வங்கியை அதிகரிக்கவே போராடி கொண்டிருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை கோவை, கன்னியாகுமரி ஆகிய இரண்டு தொகுதிகளும் பா.ஜனதாவுக்கு செல்வாக்கான தொகுதிகளாக பார்க்கப்படுகிறது. இந்த தொகுதிகளில் மட்டும்தான் 85 சதவீதம் பூத் கமிட்டிகளும் வலுவாக இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடுவது சாதகமாக இருக்கா? என்ற கள நிலவரம் மேலிடத்துக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே ராமநாதபுரத்தில் போட்டியிடும் திட்டத்தை கைவிட முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுபற்றி பா.ஜனதா செயற்குழு உறுப்பினர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறும்போது, பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்கள் விருப்பம். இது தொடர்பாக ஏராளமானோர் பிரதமருக்கு கடிதங்களும் அனுப்பி இருக்கிறார்கள்.

மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் எல்லா தொகுதிகளிலும் நிலைமைகள் மாறும் என்பதால் தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் பயத்தில் உள்ளன. அதனால்தான் அவர்களும் ராமநாதபு ரத்தில் தனிக்கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள்.

ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட வாய்ப்பும் இருப்பதாகவே கருதுகிறோம் என்றார்.

Tags:    

Similar News