தமிழ்நாடு

அமல்ராஜ்

தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மாயமான மீனவரை 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

Published On 2022-08-30 08:47 GMT   |   Update On 2022-08-30 08:47 GMT
  • தேங்காய்பட்டணம் துறைமுகத்தின் முகத்துவார பகுதியில் வந்தபோது மணல்திட்டில் படகு சிக்கி கவிழ்ந்தது.
  • கடலோர காவல் படை போலீசாரும் மீனவர்களும் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்:

தேங்காய்பட்டணம் துறைமுக முகப்பு பகுதியில் அடிக்கடி படகுகள் கவிழ்ந்து விபத்துக்கள் நடக்கும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இந்த பகுதியில் 25-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பலியாகி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பூத்துறையைச் சேர்ந்த சைமன் என்ற மீனவர் படகு கவிழ்ந்து பலியானார். இதையடுத்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துறைமுக முகத்துவாரத்தில் உள்ள மணலை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரி போராட்டம் செய்தனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இந்த பிரச்சனை தொடர்பாக விஜய்வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார்கள். துறைமுக முகத்துவாரத்தில் உள்ள மணலை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து இருந்தார்.

இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தொடங்கினார்கள். இந்த நிலையில் நேற்று மீண்டும் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் மாயமாகியுள்ளார். இணையம் புத்தன் துறையைச் சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது 67). இவர் நேற்று காலை இன்ஜின் இல்லாத சிறிய பைபர் படகு ஒன்றில் தேங்காய்பட்டணம் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். மதியம் கரை திரும்பிக் கொண்டிருந்தபோது தேங்காய்பட்டணம் துறைமுகத்தின் முகத்துவார பகுதியில் வந்தபோது மணல்திட்டில் படகு சிக்கி கவிழ்ந்தது.

இதில் அமல்ராஜ் கடலுக்குள் விழுந்து தத்தளித்தார். அப்போது அந்த வழியாக படகில் வந்த மீனவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் ராட்சத அலை அமல்ராஜை மூழ்கடித்தது. இதைத் தொடர்ந்து மீனவர்கள் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அமல்ராஜ் கிடைக்கவில்லை.

இதுகுறித்து கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலோர காவல் படை போலீசாரும் மீனவர்களும் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டதை தொடர்ந்து தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக தேடும் பணி நடந்து வருகிறது. ஆனால் அமல்ராஜ் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதனால் அவரது கதி என்னவென்று தெரிய வில்லை. மீனவர் மாயமாகி உள்ளதால் அவரது குடும்பத்தினர் மிகவும் சோகத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News