நீர்மட்டம் குறைந்ததால் வறண்டு காணப்படும் மேட்டூர் அணை
மேட்டூர் அணை நீர்மட்டம் 70.97 அடியாக குறைந்தது- 3 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி முழுமை பெறுமா?
- குறுவை பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும்.
- அதிகபட்சமாக மேட்டூர் அணையில் 6 டி.எம்.சி.வரை குடிநீர் மற்றும் மீன் வளர்ச்சிக்காக தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கம் எனப்படும் மேட்டூர் அணை டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 17.37 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
குறுவை பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும். அதன்படி கடந்த 12-ந்தேதி குறுவை சாகுபடிக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது.
பின்னர் பாசன தேவைக்கு ஏற்ப நீர் திறப்பு குறைத்தும் அதிகரித்தும் திறந்து விடப்பட்டு வந்தது. அதன்படி நீர் திறப்பு கடந்த 2-ந்தேதி 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. அதன் பிறகு 7-ந்தேதி தண்ணீர் திறப்பு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் நீர் இருப்பை கருத்தில் கொண்டு தற்போது விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இதுவரை பெய்யவில்லை. அதே நேரத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து போதிய அளவில் தண்ணீர் திறந்து விடாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது.
நேற்று காலை 197 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 154 கன அடியாக குறைந்தது. வழக்கமாக இதே காலக்கட்டத்தில் தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் தீவிரமடைந்து காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அதாவது ஜூன் மற்றும் ஜூலை மாதம் என்பது தமிழில் ஆடி மாதமாகும். பொய்க்காத காவிரி பண்டைய காலங்களில் பருவமழை குறித்த நேரத்தில் தவறாமல் பெய்து வந்ததால் பருவமழை காலத்துக்கு ஏற்றவாறு காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.
இதன் காரணமாக வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத காவிரி என்று காவிரியை அழைப்பார்கள். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறித்த நேரத்தில் தீவிரம் அடையாததால் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 70.97 அடியாக சரிந்துள்ளது. குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு 39 நாட்களில் 32 அடி சரிந்து தற்போது நீர்மட்டம் 70 அடியாக மட்டுமே உள்ளது.
மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 33.53 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி. அதிகபட்சமாக மேட்டூர் அணையில் 6 டி.எம்.சி.வரை குடிநீர் மற்றும் மீன் வளர்ச்சிக்காக தண்ணீர் தேக்கி வைக்கப்படும். அந்த வகையில் பார்த்தால் தற்போது தினமும் முக்கால் டி.எம்.சி .தண்ணீர் காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வருகிறது.
எனவே மேட்டூர் அணையில் இருந்து இன்னும் 3 வார காலத்திற்கு மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் 3 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி முழுமை பெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே பருவமழை பெய்து, காவிரியில் வெள்ளம் கரைபுரண்டால் மட்டுமே குறுவை சாகுபடி முழுமை பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.