தமிழ்நாடு

மேட்டுப்பாளையம் ரெயில் நிலைய 150-வது ஆண்டு விழா: மாணவர்களை மலை ரெயிலில் அழைத்து சென்ற தென்னக ரெயில்வே

Published On 2023-08-31 07:11 GMT   |   Update On 2023-08-31 07:11 GMT
  • மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டி மலை ரெயில் மட்டுமின்றி சென்னை, கோவைக்கும் ரெயில்கள் இயக்கப்படுகிறது.
  • மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரி டீ சர்ட் அணிந்து 150-வது ஆண்டு விழாவை கொண்டாடினர்.

மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் நாட்டில் உள்ள மிகப்பழமையான ரெயில் நிலையங்களில் ஒன்றாகும்.

கடந்த 1873-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ரெயில் நிலையத்தில் இருந்து தான் உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது

மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டி மலை ரெயில் மட்டுமின்றி சென்னை, கோவைக்கும் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் மக்கள் செயல்பாட்டிற்கு வந்து 150 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு ரெயில் நிலையத்தின் பழமையையும், முக்கியத்து வத்தையும் உணர்த்தும் வகையில் ரெயில்வே நிர்வாகம் அரசு பள்ளி மாணவ, மாணவிகளை மேட்டுப்பாளையம் முதல் கல்லாறு வரை இலவசமாக மலை ரெயிலில் பயணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

அதன்படி இன்று காலை 10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் சுற்று வட்டாரப்பகுதிகளான ஓடந்துறை, காட்டூர், ஊமப்பாளையம், மணிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 200 பேர் மேட்டுப்பாளையம் முதல் கல்லாறு வரை ஊட்டி மலை ரெயிலில் தென்னக ரெயில்வே சார்பில் அழைத்து செல்லப்பட்டனர். ரெயில் பெட்டியில் ஏறியது முதல் ரெயில் கிளம்பும் வரை மாணவ, மாணவிகள் சத்தமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரி டீ சர்ட் அணிந்து 150-வது ஆண்டு விழாவை கொண்டாடினர்.

இந்த ரெயிலை இயக்குநர் மற்றும் சீனியர் டிவிசனல் மெக்கானிக்கல் என்ஜினீயர் பரிமளக்கு மார், நீலகிரி மலை ரெயில் உதவி இயக்குநர் சுப்ரமணி மற்றும் ரெயில் ஆர்வலர் டி.எல்.எஸ்.ராஜேந்திரன், ஹபிபுல்லா உள்ளிட்ட பலர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் ரெயில்வே ஊழியர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News