தமிழ்நாடு

மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்: விசாரணைக்கு ஆஜராக பயிற்சி டாக்டருக்கு சம்மன்

Published On 2023-11-04 08:06 GMT   |   Update On 2023-11-04 08:06 GMT
  • மாணவி சுகிர்தா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சக மாணவிகளிடமும் சுகிர்தாவின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
  • விசாரணைக்கு ஆஜராகும் பயிற்சி மாணவர் ஹரீஸிடம் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

நாகர்கோவில்:

குலசேகரம் மூகாம்பிகா கல்லூரியில் படித்து வந்த தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவ மாணவி சுகிர்தா விடுதியில் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி பேராசிரியர் பரமசிவம், பயிற்சி மாணவர் ஹரீஷ், மாணவி ப்ரீத்தி மீது வழக்குப்பதிவு செய்தனர். பேராசிரியர் பரமசிவத்தை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.போலீசுக்கு மாற்றப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

மாணவி சுகிர்தா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சக மாணவிகளிடமும் சுகிர்தாவின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஹரீஸ், ப்ரீத்தி ஆகியோரை பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் இருவரும் முன் ஜாமீன் பெற்றனர்.

இந்த நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த பரமசிவத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணைக்கு பிறகு மீண்டும் பரமசிவம் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து ஹரீஸ், ப்ரீத்தியிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் ஹரீஷ், ப்ரீத்தி இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்ட னர். இந்த நிலையில் முதல் கட்டமாக பயிற்சி மாணவர் ஹரீசுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த ஹரீசை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வருகிற 7-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர்.

விசாரணைக்கு ஆஜராகும் பயிற்சி மாணவர் ஹரீஸிடம் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். மாணவி சுகிர்தா தற்கொலை குறித்த விவரங்கள் மற்றும் அவர் எழுதி வைத்திருந்த கடிதங்கள் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ப்ரீத்தியிடம் அடுத்த கட்டமாக விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News