தமிழ்நாடு

நீலகிரி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பு

Published On 2023-10-13 10:09 GMT   |   Update On 2023-10-13 10:09 GMT
  • கோழிக்கோட்டில் உள்ள 8 போலீஸ் நிலையங்கள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் வந்துள்ளது.
  • எல்லையோர கிராமங்கள், வனங்களில் நக்சல் தடுப்பு பிரிவினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தையொட்டி கேரள மாநிலத்தின் வயநாடு அருகே கம்பமலை எஸ்டேட் பகுதி உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த பகுதியில் நுழைந்த மாவோயிஸ்டுகள், அங்கிருந்த அரசு அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி பொருட்களை சூறையாடியதுடன், அங்கு சுவரொட்டிகளையும் ஓட்டி சென்றனர்.

இதையடுத்து கேரள போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே கம்பமலையில் இருந்து 1 அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மக்கி மலைக்கு மாவோயிஸ்டுகள் இடம் பெயர்ந்தனர். அவர்கள், அங்குள்ள தனியார் தங்கும் விடுதிக்குள் சென்று தாங்கள் வந்து சென்றது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க கூடாது என மிரட்டல் விடுத்து சென்றனர்.

இந்த நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள 8 போலீஸ் நிலையங்கள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் வந்துள்ளது.

இதையடுத்து உளவுத்துறை கேரள அரசை தொடர்பு கொண்டு கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு எச்சரிக்கை செய்துள்ளது. இதனை தொடர்ந்து கோழிக்கோடு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வருபவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

மேலும் மாநிலத்தில் உள்ள வனப்பகுதிகளிலும் கேரள அதிரடிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு யாராவது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிகின்றனரா என்பதையும் கண்காணித்து வருகின்றனர்.

மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்த இருப்பதாக வந்த தகவலை அடுத்து, கேரள எல்லையையொட்டி உள்ள நீலகிரி மாவட்ட த்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரள அதிரடிப்படை போலீசார் தமிழக எல்லையில் உள்ள வனப்பகுதிகளில், தமிழக போலீசார் உதவியுடன் கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லையோர கிராமங்கள், வனங்களில் நக்சல் தடுப்பு பிரிவினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். புதிதாக யாரேனும், கிராமப்பகுதிகளில் நடமாடினால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள 11 சோதனைச்சாவடிகளிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வனப்பகுதி மற்றும் வனத்தையொட்டி இருக்க கூடிய கிராமங்களிலும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News