தமிழ்நாடு

ஆக்கிரமிப்புகள் அகற்றும் விவகாரம்- அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு கடும் எச்சரிக்கை

Published On 2023-03-27 09:12 GMT   |   Update On 2023-03-27 09:12 GMT
  • மனு மீதான விசாரணை நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு வந்தது.
  • எதிர்காலங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

மதுரை:

மதுரை மாவட்டம் ஏழுமலை கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நட்டாத்தி நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவிக்கையில், மதுரை மாவட்டம் ஏழுமலை கிராமத்தில் குறிப்பிட்ட ஆக்கிரமிப்பை சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்து 8 வாரத்திற்குள் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிட்டிருந்தும், ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த வழக்கு குறித்து அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பின்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. அதன் பின்பு தான் ஆக்கிரமிப்பு தற்போது அகற்றப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இத்தகைய நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. இது ஆரோக்கியமான போக்கு இல்லை. எதிர்காலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் வழக்குகளில் அதிகாரிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து இந்த வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News