தமிழ்நாடு செய்திகள்

விருத்தாசலம் அருகே கண்ணிவெடி வெடித்து சிறுவன் உள்பட 4 பேர் படுகாயம்

Published On 2023-04-20 13:08 IST   |   Update On 2023-04-20 13:08:00 IST
  • முந்திரி தோப்பில் காட்டுப்பன்றி மற்றும் நரி போன்ற விலங்குகளை பிடிப்பதற்காக சில மர்ம நபர்கள் மண்ணில் அங்காங்கே கண்ணிவெடிகளை புதைத்து வைத்திருந்தனர்.
  • மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் 4 பேரும் காலை வைத்தனர்.

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தில் ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமான முந்திரிதோப்பு உள்ளது.

இங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (வயது 60), இளையகுமார் (30), மதுரை பாண்டியன் (21), சிறுவன் ரகு (13) உள்ளிட்ட 4 பேரும் முந்திரிக்கொட்டை பொறுக்கும் வேலைக்கு சென்றனர்.

இந்த முந்திரி தோப்பில் காட்டுப்பன்றி மற்றும் நரி போன்ற விலங்குகளை பிடிப்பதற்காக சில மர்ம நபர்கள் மண்ணில் அங்காங்கே கண்ணிவெடிகளை புதைத்து வைத்திருந்தனர். இதனை அறியாத 4 பேரும் முந்திரி தோப்பில் கீழே விழுந்து கிடந்த முந்திரிகளை பொறுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் 4 பேரும் காலை வைத்தனர். இதில் கண்ணிவெடி வெடித்து 4 பேரும் தனித்தனியே தூக்கி வீசப்பட்டனர். இதில் முகம், கை, கால், மார்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ரங்கநாதனுக்கு ஒரு கால் துண்டானது.

பலத்த சத்தத்தை கேட்டு அங்கு சென்ற பிற தொழிலாளர்கள் 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ரங்கநாதன் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கும், மதுரை பாண்டியன் விருத்தாசலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் விவசாய நிலத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் முந்திரிதோப்பில் கண்ணி வெடி புதைத்து வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

முந்திரி தோப்பில் கண்ணிவெடி வெடித்து ஒரு சிறுவன் உள்பட 4 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பதட்டத்தை உருவாக்கி உள்ளது.

Tags:    

Similar News