தமிழ்நாடு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- 257 பேரிடம் மறு விசாரணை

Update: 2022-06-25 04:35 GMT
  • வாளையார் மனோஜ், ரமேஷ், தனபால் ஆகியோர் நிபந்தனை ஜாமீனில் தளர்வு கோரி மனுதாக்கல் செய்திருந்தனர்.
  • கொடநாடு வழக்கை நீதிபதி அடுத்த மாதம் 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தற்போது மறு விசாரணை நடந்து வருகிறது.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படை போலீசார் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், மனோஜ் உள்ளிட்டவர்களிடமும், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா உள்பட பலரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி, சதீசன், பிஜின்குட்டி, உதயன், சந்தோஷ் சாமி ஆகியோர் ஆஜராகினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை அடுத்த மாதம் 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து சிறப்பு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் கூறியதாவது:-

கொடநாடு வழக்கில் இதுவரை 257 பேரிடம் மறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் கேரளா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதனால் அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தோம்.

வாளையார் மனோஜ், ரமேஷ், தனபால் ஆகியோர் நிபந்தனை ஜாமீனில் தளர்வு கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். தளர்வு கொடுத்தால் சாட்சிகள் கலைக்கப்பட வாய்ப்பிருப்பதாக எதிர்ப்பு தெரிவித்தோம். இதை ஏற்ற நீதிபதி வழக்கை அடுத்த மாதம் 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News