தமிழ்நாடு

கீழடி 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் இன்றுடன் நிறைவு

Published On 2023-09-30 09:19 GMT   |   Update On 2023-09-30 10:17 GMT
  • 8 கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் முதுமக்கள் தாழி, பானை ஓடுகள், கண்ணாடி வளையல்கள், அணிகலன்கள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன.
  • இன்றுடன் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் முடிவடைய உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

முதற்கட்டமாக நடந்த அகழாய்வில் தமிழகத்தின் நாகரிகத்தை அறியும் வகையில் பழமையான தொல்பொருட்கள் கிடைத்தன. இதனை தொடர்ந்து 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்தது. 8 கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் முதுமக்கள் தாழி, பானை ஓடுகள், கண்ணாடி வளையல்கள், அணிகலன்கள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன.

இதனை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையாக வைகை கீழடி நாகரிகம் விளங்கி இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து கீழடி மற்றும் அருகில் உள்ள கொந்தகை, மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கீழடியில் 12 குழிகளும், கொந்தகையில் 2 குழிகளும் தோண்டப்பட்டு தொல்லியல் பணிகள் நடந்தது. அண்மையில் கீழடி அகழாய்வு குறித்து ஆவணம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்றுடன் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் முடிவடைய உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று மாலை பணிகள் முடிந்த பின் தோண்டப்பட்ட குழிகள் பாதுகாப்புடன் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News