தமிழ்நாடு

கோவை கார் குண்டு வெடிப்பு

ஐ.எஸ். அமைப்பு ஆதரவு கொள்கை- கோவையில் 200 பேர் தொடர்ந்து கண்காணிப்பு

Published On 2023-06-15 05:14 GMT   |   Update On 2023-06-15 05:14 GMT
  • ஐஎஸ் ஆதரவு எண்ண ஓட்டத்தில் உள்ள நபர்களை கண்டறிந்து அவர்களின் செயல்பாட்டை கண்காணிக்க தொடங்கினர்.
  • கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு மாவட்டத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம்.

கோவை:

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி கார் வெப்பு சம்பவம் நடைபெற்றது.

இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான். அவனது வீட்டில் இருந்து வெடிமருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த முபின் கோவையில் மக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவை மாநகரில் நுண்ணறிவுப் பிரிவினர் (ஐ.எஸ்), மத ரீதியிலான தகவல்களை விசாரிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவினர் (எஸ்.ஐ.சி.) ஆகியோர் தங்களது ரகசிய கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

ஐஎஸ் ஆதரவு எண்ண ஓட்டத்தில் உள்ள நபர்களை கண்டறிந்து அவர்களின் செயல்பாட்டை கண்காணிக்க தொடங்கினர். அவ்வாறு கோவையில் 200 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு மாவட்டத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம். குறிப்பாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளில் தீவிரமாக இருப்பவர்களை கண்காணித்து வந்தோம்.இதில் 200 பேர் இருப்பதை கண்டறிந்துள்ளோம்.

படித்தவர்கள், படிக்காதவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர் என எல்லா தரப்பினரும் இதில் அடக்கம். இவர்களின் செயல்பாடுகள், செல்லும் இடங்கள், செல்போன் அழைப்புகள் உள்ளிட்ட விவரங்களையும் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய தகவல்கள் பரிமாறப்படுகிறதா என்பது குறித்தும் கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News