மாமல்லபுரம் கடற்கரையில் புதுமாப்பிள்ளை இறந்ததாக பரபரப்பு
- மாசிமக தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று காலை மாமல்லபுரம் கடற்கரையில் நடந்தது.
- முன்னதாக நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை விடிய விடிய ஆட்டம் பாட்டத்துடன் விழா தொடர்ந்து நடைபெற்றது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வடபகுதியில் மாசி மக விழாவை இருளர்கள் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.
இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான இருளர்கள் குடும்பத்துடன் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் குவிந்து உள்ளனர். அவர்கள் குடில் அமைத்து தங்கி இருக்கிறார்கள். நேற்று நடைபெற்ற விழாவின்போது சுமார் 25-க்கும் மேற்பட்ட ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர். அவர்களது பாரம்பரிய வழிபாடும் நடைபெற்றது.
இன்று காலை மாசிமக தீர்த்தவாரி நிகழ்ச்சி மாமல்லபுரம் கடற்கரையில் நடந்தது. முன்னதாக நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை விடிய விடிய ஆட்டம் பாட்டத்துடன் விழா தொடர்ந்து நடைபெற்றது.
இந்தநிலையில் வாலிபர் ஒருவர் கையில் மாலையுடன் புது மாப்பிள்ளை கோலத்தில் கடற்கரையில் இறந்து கிடப்பதாக தகவல் பரவியது. இதனால் அங்கு குவிந்து இருந்த இருளர்கள் மத்தியில் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து விசாரித்தபோது அது இருளர்கள் பற்றிய குறும்படத்திற்காக எடுக்கப்பட்ட படப்பிடிப்பு என்பதும், அதை தத்ரூபமாக எடுப்பதற்காக டிரோன் கேமரா வைத்து படப்பிடிப்பு நடத்தியதும் தெரிந்தது.
இதையடுத்து படப்பிடிப்பு நடத்தியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.