தமிழ்நாடு

பரமத்திவேலூரில் 72 வயது முதியவருக்கு காதணி விழா நடத்திய பேரன், பேத்திகள்

Published On 2022-09-19 05:54 GMT   |   Update On 2022-09-19 05:54 GMT
  • வரதராஜூவை குழந்தை போல பாவித்து மொட்டையடித்து பின்னர் காது குத்தப்பட்டது.
  • தாத்தா வரதராஜூக்கு உறவினர்கள், பேரன், பேத்திகள் சீர்கொடுத்து மகிழ்ந்தனர்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுல்தான் பேட்டையை சேர்ந்த வரதராஜன் (72). இவருக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் 28 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

தனது மனைவி தனலட்சுமி இறந்துவிட்ட நிலையில் சுல்தான் பேட்டையில் உள்ள தனது மகன் வீட்டில் வசித்து வருகிறார். வரதராஜூக்கு மகன், மகள் வழியில் 5 பேரன்கள், 3 பேத்திகள் உள்ளனர்.

இந்த நிலையில் தங்களது தாத்தாவுக்கு காதணி விழா நடத்த பேரன், பேத்திகள் திட்டமிட்டனர்.

இதற்காக தங்களது நெருங்கிய உறவினர்களை அழைத்து நல்ல நேரம் பார்த்து தங்களது தாத்தா வசிக்கும் வீட்டில் வைத்து காதணி விழா நடத்தினர். வரதராஜூவை குழந்தை போல பாவித்து மொட்டையடித்து பின்னர் காது குத்தப்பட்டது.

பின்னர் தாத்தா வரதராஜூக்கு உறவினர்கள், பேரன், பேத்திகள் சீர்கொடுத்து மகிழ்ந்தனர். 72 வயதில் பேரன், பேத்திகளோடு அமர்ந்து போட்டோ எடுத்துக்கொண்ட வரதராஜூ நெகிழ்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் கூறும்போது, எனது சிறுவயதில் காது குத்துவதற்காக குலதெய்வகோவிலுக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக காதணி விழாவிற்கு கொண்டு சென்ற தங்க தோடுகள், புது துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது. அதனால் காதணி விழா நின்றுபோனது.

இப்போது என் பேரன், பேத்திகள் இந்த விழாவை நடத்தியது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

தாத்தாவுக்கு காது குத்தியது குறித்து பேரன், பேத்திகள் கூறுகையில், எங்கள் தாத்தாவின் சிறு வயதில் நிறைவேறாமல் போன ஆசையை தற்போது நாங்கள் செய்துள்ளோம். இதன்மூலம் அவரது ஆசீர்வாதம் எங்களுக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

72 வயதான தாத்தாவுக்கு பேரன், பேத்திகள் காதணி விழா நிகழ்ச்சி நடத்தியது அப்பகுதி மக்களிடம் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News