தமிழ்நாடு

மரத்தடியில் அமர்ந்து மாணவ, மாணவிகள் காலாண்டு தேர்வை எழுதியபோது எடுத்த படம்.

மின்சாரம் துண்டிப்பு: மரத்தடியில் அமர்ந்து தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவ-மாணவிகள்

Update: 2022-09-30 03:15 GMT
  • மின்கட்டணம் செலுத்தப்படாததால் அந்த பள்ளிக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
  • நேற்று மாணவ, மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து காலாண்டு தேர்வை எழுதினர்.

விக்கிரமசிங்கபுரம்:

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள அனவன்குடியிருப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 100 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த பள்ளிக்கான கடந்த மாத மின்சார கட்டணத்தை செலுத்தவில்லை எனவும், இதற்காக 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னரும் மின்கட்டணம் செலுத்தப்படாததால் அந்த பள்ளிக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். தற்போது கடும் வெயில் அடிக்கிறது. மேலும் மின்சாரம் இல்லாததால் வகுப்பறையில் போதிய வெளிச்சம் இல்லை. இதனால் வகுப்பறையில் மாணவ, மாணவிகளை உட்கார வைத்து பாடம் நடத்த முடியாத சூழ்நிலை உருவாகி விட்டது. எனவே, மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பள்ளி வளாகத்திலுள்ள மரத்தடியில் வைத்து பாடம் நடத்தி வருகின்றனர். நேற்று மாணவ, மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து காலாண்டு தேர்வை எழுதினர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'மாணவர்கள் படிப்பிற்காக அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தநிலையில் மின்சாரம் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மாணவர்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகளாவது மனிதாபிமான முறையில் மின்சாரம் வழங்கி இருக்கலாம்' என்றனர்.

Tags:    

Similar News