தமிழ்நாடு

யார் தலைவர் என்பதில் போட்டி: திருப்பூர் அரசு பள்ளியில் மாணவர்கள் பயங்கர மோதல்

Published On 2023-07-28 09:18 GMT   |   Update On 2023-07-28 09:18 GMT
  • மாணவர்களின் பெற்றோரை வரவழைத்த ஆசிரியர்கள், மாணவர்கள் பற்றி புகார் அளித்ததுடன், மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.
  • 9-ம் வகுப்பு மாணவனை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவனது மண்டை உடைந்தது.

திருப்பூர்:

திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேட்டில் வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 2500 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் அங்கு படிக்கும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த மாணவர்களின் பெற்றோரை வரவழைத்த ஆசிரியர்கள், மாணவர்கள் பற்றி புகார் அளித்ததுடன், மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.

இருப்பினும் நேற்று மாணவர்கள் இருதரப்பினருக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் 9-ம் வகுப்பு மாணவனை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவனது மண்டை உடைந்தது.

இதுபற்றி தகவலறிந்த ஆசிரியர்கள் காயமடைந்த மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர். மேலும் மாணவனை தாக்கிய மாணவர்கள் மீது பள்ளி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

போலீசார் விசாரணையில், யார் தலைவர் என்கிற போட்டியில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது தெரிய வந்தது.

இந்தநிலையில் இன்று காலை இறைவணக்கத்தின்போது அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா, மாணவர்களிடையே ஏற்படும் மோதலை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

திருப்பூர் அரசு பள்ளியில் இருதரப்பு மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News